கைதான செந்தில் பாலாஜி?! கலங்கிய முதல்வர் ஸ்டாலின்! அலேக்காக அள்ளிய அமலாக்கத்துறை..!! பரபரத்த அரசியல் களம்.. அடுத்து என்ன?
எதிர்பார்த்தது போலவே, பலமணி நேர கிடுக்கிப்பிடி சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஐயோ நெஞ்சு வலிக்குதே என்று செந்தில் பாலாஜி கதற, அரசின் செல்வாக்கு மிக்க அமைச்சரை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்ற காட்சி, தமிழக அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால் அதிர்ச்சியுள்ள முதல்வர் ஸ்டாலின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்.
முதலில் ஐடி… இப்போது ஈ.டி…
தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை என்று வளமான துறையை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் செந்தில் பாலாஜி. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடி ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கடந்த மே 26ம் தேதி கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அவரது தம்பி அசோக்குமார், அமைச்சரின் வலதுகரம் என்று சொல்லப்படும் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்த், மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், கொங்கு உணவக உரிமையாளர் மணி, காளிபாளையம் பெரியசாமி ஆகியோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
ஈரோட்டைச் சேர்ந்த டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மொத்தம், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்கள் அள்ளிச் சென்றனர். அதன் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சென்னை அடையாறு பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்துக்கு அதிரடியாக ஜூன் 13ம் தேதி காலை 7.30 மணி அளவில் வந்தனர். அவர்களுடன் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உடன் வந்திருந்தனர்.
பதறிய செந்தில் பாலாஜி!
இந்த தகவல், வாக்கிங் சென்றிருந்த அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனால் பதற்றமான செந்தில் பாலாஜி, பாதியிலேயே அவர் வீடு திரும்பினார். இதைடுத்து, அவர் முன்னிலையிலேயே வீட்டின் ஒவ்வொரு அறையாக அதிகாரிகள் சல்லடையாகச் சோதனையிட்டனர். மேலும், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு, அபிராமபுரம் 3-வது தெருவில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை கோட்டையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகமும் சோதனைக்கு தப்பவில்லை. இந்த தகவலால் கோட்டை வட்டாரங்கள் அதிர்ந்தன. முதல்வர் மு.க. ஸ்டாலின் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையெ, தகவல் அறிந்த செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள், திமுக நிர்வாகிகள், கட்சியினர் உள்ளிட்டோர் அவரது வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தொழில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதேபோல், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீட்டில் 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தி வந்தனர்.
ஐயோ.. டாக்டரை வரச்சொல்லுங்க!
ஜூன் 13ம் தேதி காலை 7:30 மணியளவில் தொடங்கிய சோதனை, நள்ளிரவு 1:30 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 17 மணி நேரங்களுக்கு மேல் நடைப்பெற்ற இந்த சோதனையை அடுத்து நள்ளிரவு 2.15 மணிக்கு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் முகம் வாடிப் போனது. நெஞ்சைப் பிடித்தபடியே, “ஐயோ, நெஞ்சுவலிக்குதே, டாக்டரை வரச்சொல்லுங்க… டாக்டரை வரச்சொல்லுங்க!” என்று கத்தியபடி சரிந்தார்.
இதையடுத்து அமலாக்கத்துறையினர், சுற்றிலும் சூழ்ந்திருந்த ஊடக நிருபர்களின் முன்னிலையில் காரில் செந்தில் பாலாஜியை அங்கிருந்து ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு 2:15 மணிக்கு அழைத்து சென்றனர். மயக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் செந்தில் பாலாஜி, காரில் அழைத்துச் செல்லப்படும் போது காலால் எட்டி உதைக்கும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகின.
மருத்துவர்கள் சொன்ன தகவல்!
இதனிடையே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஐ.சி.யு. வில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன. இது குறித்து, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையின் நோடல் அதிகாரி டாக்டர் ஆனந்த் கூறுகையில், செந்தில் பாலாஜி இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உயர் இரத்த அழுத்தமும், ஈ.சி.ஜி.,யில் மாறுதல்கள் இருந்ததால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமைச்சர் சேகர் பாபு சொன்னது போல அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றார்.
பொதுவாக, கைது நடவடிக்கையில் இருந்து தப்ப, உடல் நிலை சரியில்லை என்று அரசியல்வாதிகள் மருத்துவமனையில் போய் சேருவது ஒருசிலரின் வழக்கமாக உள்ளது. எனவே, செந்தில் பாலாஜியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து மருத்துவப் பரிசோதனை நடத்த அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் கொடுக்கும் அறிக்கைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும். இவரது உடல் நிலை ஆரோக்கியமான பிறகு அண்டை மாநிலத்தில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டிருக்கிறார்கள்.
மருத்துவமனைக்கு வந்த முதல்வர்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், பொன்முடி, கே.என். நேரு, எ.வ. வேலு, சேகர் பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் நேரில் போய் பார்த்தனர். எனினும், ஐ.சி.யு வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியை யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. காலை 10:30 மணியளவில், முதல்வர் ஸ்டாலின் நேரில் போய் உடல் நலம் விசாரித்தார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கலங்கிய நிலையில் இருந்தாராம்.
இதனிடையே, செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டி.ஆர். பாலு, ஆ. ராசா உள்ளிட்ட மூத்த் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சட்ட வல்லுனர்களின் கருத்தையும் அவர் கேட்டறிந்துள்ளார். அதன் அடிப்படையில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டு, அவர் வகித்தப் பொறுப்புகள் வேறு அமைச்சருக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.
செந்தில் பாலாஜி மனைவி மனு!
கைது நடவடிக்கையால் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு, சென்னை நோக்கி அவர்கள் புறப்பட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வண்ணம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவு சிறப்பித்ததை எடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜியை கைது செய்த போது சட்ட விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும், குடும்பத்தினருக்கு எந்த முன் அறிவிப்பும் இல்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை பிற்பகல் 2.15க்கு நடைபெறுகிறது.
அமைச்சரவையில் மூத்த அமைச்சரான செந்தில் பாலாஜியின் கைது விவகாரம் தமிழக அரசியலில் சூறாவளியை கிளப்பியுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்கள் மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தலைவர்கள் ரியாக்சன்…
அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு கைது செய்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், ஆளுங்கட்சி ஆதரவு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி: மத்திய அரசின் இந்த உருட்டல் மிரட்டலுக்கு திராவிட முன்னேற்ற கழகம் அஞ்சாது. இதனை சட்டப்படி சந்திப்போம். அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

அமைச்சர் பொன்முடி: பா.ஜ.க ஆளாத மாநிலங்களின் ஆட்சியை பழிவாங்கும் நடவடிக்கைதான் இது. டெல்லி, மேற்குவங்கம், கர்நாடாகாவைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் ஒன்றிய அரசு இதை செய்திருக்கிறது. எது நடந்தாலும் அதை எதிர்கொள்வோம்.

கே.எஸ்.அழகிரி: `அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையினரின் நடவடிக்கை ஜனநாயக படுகொலை, அவர் ஒரு அரசியல் தலைவர், அவர் எங்கும் ஓடிவிடவில்லை; நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துசென்ற மறுநாளில் இது நடக்கிறது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

விசிக தலைவர் திருமாவளவன்: நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க நெருக்கடிகளை கொடுத்துவருகிறது. செந்தில் பாலாஜி கைது கண்டனத்திற்குரியது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்: அதிமுக ஆட்சியில் செய்த ஊழலுக்கு தற்போது விசாரணை என்றால்… இது நேர்மையான நடவடிக்கையல்ல. தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற இன்னும் பல நடவடிக்கைகளை பா.ஜ.க அரசு செய்யும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை பயன்படுத்திக்கொள்வதுதான் தொடர்ந்து நடந்துவருகிறது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக: சட்ட விரோத மதுபான பார்கள் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருக்கிறது. செந்தில் பாலாஜி சட்ட விரோத மது விற்பனையால் அரசின் கருவூலத்திற்கு வருவாய் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதனால் அவர் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருப்பது சட்டப்படி நடந்திருக்கிறது.
மக்கள் பாடம் புகட்டுவார்கள்…
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான். அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி – அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு நடத்துவோம் என்று காட்ட நினைத்திருக்கிறார்கள்.
விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள். நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும்? இந்த வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது தேவையா? என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார். பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. இந்த அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X






