மயங்கி விழுந்த முதியவரை சட்டென காப்பாற்றிய செவிலியர்..!

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட நபரின் உயிரை காப்பாற்றிய அரசு செவிலியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

 

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் ஆக பணிபுரிந்து வரும் விஜய பரிமளா என்பவர் பணி முடிந்து தனது சொந்த ஊரான பம்மலார் பாளையம் செல்வதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

 

விஜய் நிர்மலா நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து 20 அடி தொலைவில் முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். பேச்சு மூச்சு இல்லாமல் கீழே கிடந்த முதியவரை பார்த்து மக்கள் கூடினர். அங்கு விரைந்து சென்று செவிலியர் விஜய் நிர்மலா சற்றும் தாமதிக்காமல் எந்தவித மருத்துவ உபகரணமும் இல்லாமல் சிபிஆர் சிகிச்சை அளித்தார்.

 

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட சற்று நேரத்தில் முதியவருக்கு சுயநினைவு திரும்பியது. முதியவர் இறந்துவிட்டார் என்று அங்கிருந்தவர்கள் கருதிய நிலையில் செவிலியர் அளித்த முதலுதவியால் சுயநினைவு திரும்பியதை கண்டு ஆச்சரியமடைந்தனர். சரியான நேரத்தில் விரைந்து செயல்பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றியதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.