கம்பீரமாக நடந்த கருப்பர் சிலை ஊர்வலம்: வானவேடிக்கை,மேளதாளங்களால் குலுங்கியது கீழக்கோட்டை! செப்.8ல் பதினெட்டாம்படி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம்..

புகழ்பெற்ற அ.கீழக்கோட்டை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகம், வரும் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது; முன்னதாக, வானவேடிக்கையுடன் மேள தாளம் முழங்க, ஜூலை 28ம் தேதி சாமி சிலை ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது.

தனிச்சிறப்பு வாய்ந்த கீழக்கோட்டை 18ம்படி கருப்பர்

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற குலதெய்வ கோவில்களில் முக்கியமானது, அ.கீழக்கோட்டையில் உள்ள பதினெட்டாம்படி கருப்பர் கோவில். இக்கோவிலின் மற்றொரு சிறப்பு, மதுரை அழகர்மலையில் இருக்கும் 18ம்படி கருப்பர் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து, பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஆலயம் அமைத்து வழிபாடு நடைபெற்று வருவதை குறிப்பிடலாம்.

 

இங்குள்ள ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் மிகவும் சக்தி வாய்ந்தவர்; பல்வேறு சிறப்புகளை கொண்டவர். பல ஆயிரம் குடும்பங்களுக்கு குல தெய்வமாகத் திகழ்ந்து வருகிறார். இக்கோவில் கும்பாபிஷேகத்தை, வருகிற செப்டம்பர் 8ம் தேதி நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டு முழூவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

அயராத திருப்பணி… கும்பாபிஷேகம்தான் இனி!

 

திருப்பணி குழுவினரின் அயராத பக்தி, கடும் உழைப்பு, உபயதாரர்களின் தாராள நன்கொடைகளால், தற்போது திருப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ரூ.18 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஆலயத்தின் திருப்பணிகளில், பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது கும்பாபிஷேக ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 

கம்பீரமாக மிளிரும் நம் காவல் தெய்வம்!

 

நின்ற கோலத்தில் உள்ள கருப்பரின் கம்பீர உருவம், தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் நமது காவல் தெய்வத்திற்கு கம்பீரத்தை தருகிறது. கருப்பரின் வலது கையானது வீச்சரிவாளுடன் ஓங்கியவாறு வீரத்தை பறைசாற்றுகிறது. மறு கையில் கதை, மண்ணை தொட்டபடி உள்ளது. முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி வீற்றிருக்கிறார். அதே போன்று ஆலயத்தில் குதிரையின் மீதேறி புறப்படும் கோலம் என்று, பல்வேறு நிலைகளில் பதினெட்டாம்படி கருப்பர் உள்ளார்.

 

கருப்பரின் கம்பீர சிலை, காரைக்குடி மாத்தூரில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகர் சிற்பக் கலைக்கூடத்தில்  தயாரானது. அங்குள்ள சிற்பி வி.ஏகாம்பரம், கண்ணும் கருத்துவமாக கருப்பரை வடிவமைத்துள்ளனர். இதில், ஒரே கருங்கல்லில் ஆன 3¼ அடி உயரத்தில் கருப்பர் சிலை, 1¼ அடி உயரத்தில் வலம்புரி விநாயகர் சிலை, நந்தி சிலை, பரிவார தெய்வங்களுக்கு பீடம், சப்த கன்னிமார்களுக்கு ஆதாரபீடத்துடன் லிங்கம் சிலை உள்ளிட்டவை செய்து முடிக்கப்பட்டுள்ளன.

அதிர வைத்த சிலை ஊர்வலம்!

 

இந்த நிலையில், பொலிவுடன் வடிவமைக்கப்பட்டுள்ள சிலைகள், கோவிலுக்கு கோலாகலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதிரச் செய்த வாணவேடிக்கைகள் ஒருபுறம், மேளதாளங்களின் விண்ணை முட்டும் ஒலி மறுபுறம் என்று, கடந்த 28-07-2022 அன்று, மாத்தூரில் இருந்து கீழக்கோட்டை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் ஆலயத்திற்கு, வாகனத்தில் சிலைகள் எடுத்து வரப்பட்டன.

 

விமரிசையாக நடைபெற்ற சிலை எடுத்து வரப்படும் நிகழ்வே, பாதி கும்பாபிஷேகம் நிறைவுற்றதை போல் கோலாகலமாகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தது. இந்த நிகழ்வில், கமிட்டி தலைவர் எஸ்.பி.ராஜன், செயலாளர் மா.சேகர், பொருளாளர் மு.கண்ணதாசன், குருக்கள் ராஜாமணி, ஸ்தபதி பாண்டி, துணைத் தலைவர் மா.வேலுச்சாமி, துணை பொருளாளர் சு.ராமக்கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் கோ.நல்லதம்பி, மு.கருணாகரன் மற்றும் கோவில் பங்குதாரர்கள், உபயதாரர்கள், கிராம முக்கியஸ்தர்கள், ஊர்பொதுமக்கள், பக்தர்கள்,  என ஏராளமானோர் பங்கேற்று ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பரின் அருளை பெற்றனர்.

 

முன்னதாக, ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் சிலையை பொலிவுடன்  கம்பீரமாக வடிவமைத்த ஸ்ரீசித்தி விநாயகர் சிற்பக் கலைக்கூடத்தின் உரிமையாளர் சிற்பி வி.ஏகாம்பரத்திற்கு விழா கமிட்டி சார்பில் பொன்னாடை போத்தி கௌரவகிக்கப்பட்டது.

 


திருப்பணிக்கு உதவலாமே!

 

கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 8ம் தேதி நடைபெற உள்ள நிலையில், முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட்  29-ம் தேதி முகூர்த்த பந்தல்க்கால் நட்டு, கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கவுள்ளன. எனவே, ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பரை குலதெய்வமாக கொண்டுள்ள மக்களும், ஆன்மிக அன்பர்களும் திருப்பணிகளுக்கு தங்களால் இயன்ற பொருளுதவி, நிதி உதவியை தந்து, இறையருள் பெறும்படி, ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கமிட்டியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.