இந்தியாவிற்கு மருத்துவ உதவி செய்துள்ள ரஷ்யா..!
ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தொற்றுநோய் நிலைமை குறித்து புதினுடன் மோடி விவாதித்தார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலைக்கு எதிரான போராட்டத்தில் தனது ஆதரவை வழங்கிய புதினுக்கு நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் சில பதிவுகளை வெளியிட்டார். விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க எரிசக்தித்துறை, ஹைட்ரஜன் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு மாறுபட்ட துறைகளில் இரு தரப்பு உறவுகள் குறித்து பேசியதாக மோடி தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து 12 டன்கள் எடை கொண்ட மருத்துவ பொருட்களை இரண்டு விமானங்களில் ரஷ்யா இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. சுமார் 20 லட்சம் மருந்துகள், 20 ஆக்சிஜன் மறுசுழற்சி உற்பத்தி சாதனங்கள், 75 வென்டிலேட்டர், 150 மருத்துவ மானிட்டர் கருவிகள் உட்பட தேவையான மருத்துவ உதவிகள் இந்தியாவிற்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இதனிடையே அமெரிக்கா உட்பட 15 நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் ஆக்சிஜன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் போன்று ஏராளமான மருத்துவ உதவிகள் அடுத்த ஓரிரு நாட்களில் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






