சிறுவன் காதில் சிக்கிய விளையாட்டுத் துப்பாக்கி குண்டு..!
சிறுவன் காதில் சிக்கிய விளையாட்டுத் துப்பாக்கி குண்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியேற்றினர். கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் வசித்து வரும் பெண் காவலரின் மகன். இவர் தற்போது ஏழாம் வகுப்பு படித்து வருகிறான்.
கிஷோர் திரைப்படங்களை பார்த்து அதில் வருவதுபோல பொம்மை துப்பாக்கியை வைத்து தனக்குத் தானே தன் தலையில் விளையாட்டுத்தனமாக சுட்டு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த பொம்மை துப்பாக்கி குண்டு தவறுதலாக சிறுவன் கிஷோரின் காதில் சிக்கிக் கொண்டது.
இதனை தொடர்ந்து வலி பொறுக்க முடியாமல் சிறுவன் அழத் துவங்கினான். சிறுவனின் அழுகை சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் குண்டை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் எடுக்க முடியவில்லை. தொடர்ந்து அழுது கொண்டிருந்த சிறுவனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர்.
அங்கு அறுவை சிகிச்சை செய்தால் தான் வெளியில் எடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் பயந்துபோன பெற்றோர் சிறுவனை அழைத்துக் கொண்டு வேறொரு தனியார் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் கைவிரித்தனர்.
இதனைத் தொடர்ந்து கிஷோரின் பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பணியில் இருந்த உதவி இருப்பிட மருத்துவர் மணிகண்டன் மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் மருத்துவ மாணவி நித்யா சிறுவனின் காதில் தண்ணீரை பீச்சி அடித்து பிளாஸ்டிக் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.






