கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு இரண்டாவது முறையாக கொரொனா..!
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு இரண்டாவது முறையாக கொரொனா கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரொனாவின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா சில மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு தொடரும் என்றும் மற்ற விவகாரங்கள் குறித்து ஏப்ரல் 20-ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் எடியூரப்பாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரொனா கண்டறியப்பட்ட நிலையில் மணிபால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ள எடியூரப்பா தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரொனா பாதிக்கப்பட்ட எடியூரப்பா 9 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.






