டிஜிபி பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை 8 வாரங்களுக்குள் முடிக்கப்படும்..!
டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை 8 வாரங்களுக்குள் முடிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. காவல்துறை பணிக்கு டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக வந்து விசாரித்து வருகிறது.
தமிழக அரசு பணி இடைநீக்கம் செய்திருக்கும் நிலையில் அவர் மீது சிபிசிஐடி காவல்துறை மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கு மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.
மேலும் விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் என்றும் கேள்வி எழுப்பினார். சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுவரை 87 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அதிகாரியின் மொபைல்போன் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் 8 வாரங்களுக்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை விரைந்து முடிக்க காவல்துறை அறிவுறுத்திய நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.






