சீட் தராததால் எரிச்சல்… சாத்தூர் எம்.எல்.எ. ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்!
அதிமுகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், அமமுகவில் இணைந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜவர்மன். கடந்த 2016 தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுப்ரமணியன், டிடிவி தினகரன் பக்கம் சென்றார். இதனால், அவர் பதவியிழந்தார்; சாத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளராக இருந்த ராஜவர்மன், போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
ஆனால், அதுவரை ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளராக இருந்த ராஜவர்மன், பின்னர் அவருடன் மோதல் போக்கையை கையாண்டார். வெளிப்படையாக ராஜேந்திரபாலாஜி மீது பல குற்றச்சாட்டுகளை ராஜவர்மன் எம்.எல்.ஏ. கூறி வந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.
வரும் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் அவர் இருந்து வந்தார்.
இதனிடையே, எம்.எல்.ஏ ராஜவர்மன், அமமுக டிடிவி.தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன், அதிமுகவில் உண்மையாக விஸ்வாசிகளுக்கும் உழைப்பவர்களுக்கும் வாய்ப்பு தரப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
அதிமுகவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலவர் என்றால், சசிகலா உற்சவர் என்று கூறிய ராஜவர்மன், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு அதிமுகவில் வாய்ப்பு தரவில்லை. உண்மையான அதிமுகவினர் டிடிவி பக்கம் வந்துவிடுவார்கள் என்றார்.
இதேபோல், அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பிரபு, கலைசெல்வன், ரத்னசபாபதியும் ஆகியோரும் தினகரனை சந்திக்கவுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




