விருப்பமனு வழங்க திடீரென அவகாசம் குறைத்த அதிமுக – காரணம் இதுதான்!
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரின் விருப்ப மனுக்கள் வரும் 3-ம் தேதி வரை மட்டுமே பெறப்படும் என, அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாத கால அவகாசம் மட்டுமே இருப்பதால், தேர்தல் பணிகளை விரைவாக முடித்தாக வேண்டிய கட்டாயம், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக தரப்பில், கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவது போன்ற பணிகள் இன்னமும் முழுமை அடையவில்லை. அதை முடித்து வேட்பாளர் நேர்காணல், இறுதிப் பட்டியல் வெளியீடு, தொகுதிகளில் பிரசாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு என பல பணிகளை செய்தாக வேண்டியுள்ளது.
இப்பணிகளை எல்லாம் கருத்தில் கொண்டு, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கும் அவகாசத்தை அந்த கட்சித் தலைமை குறைத்துள்ளது. அதாவது, விருப்ப மனு அளிக்க மார்ச் 5 ஆம் தேதி கடைசி நாள் என்பது, இனி மார்ச் 3ஆம் தேதிக்குள் வழங்க வேண்டுமென்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்கள், நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக தலைமைக் கழகத்தில் கடந்த 24-02-2021 முதல், அதிமுகவின் சார்பில் வேப்டாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினருக்கு விருப்பமனு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று, இந்தியத் தேர்தல் ஆணையம் கால அட்டவணை வெளியிட்டுள்ள நிலையில், அதிமுகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும், அதிமுகவினருக்கு 03-03-2021 வரை, புதன்கிழமை மட்டுமே விண்னப்பப் படிவங்கள் வழங்கப்படும் என்றும், அவ்வாறு வழங்கப்படும் அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்து அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இந்த காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




