ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்..!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்றும் சென்னையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, இரு சக்கர, நான்கு சக்கர வாகன உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது புதிய வாகன தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தமிழ்நாட்டினை முதன்மை விருப்பமாக கருதுகின்றன. இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் உற்பத்தி பிரிவுகள் கோயம்புத்தூரில் இயங்கி வருகிறது. தற்போது மோட்டார் வாகன பந்தயத்திலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாடு வலுவான ஆட்டோமொபைல் உற்பத்தி கட்டமைப்புகளை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உலக அளவிலான மோட்டார் வாகன கார் பந்தய விளையாட்டுப் போட்டிகளுக்கான கார் உற்பத்தி ஆலைகளையும் அதற்கு தேவையான உப தொழிற்சாலைகளையும் அமைக்க தேவையான சூழல் உள்ளது.
உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன் மூலம் சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தி தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பட வாய்ப்புகள் உள்ளது. விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை ஊக்குவித்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்க புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும்.
புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசின் நிர்வாக வரலாற்றின் பெருமைமிக்க அடையாளமாக விளங்கி வந்தாலும், தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்திற்கும், உலக தரத்திலான பொது நிர்வாக உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும் ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பது இன்றியமையாதது. புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் அனைத்து அரசு துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்படும். தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள் மற்றும் பசுமை கட்டிட தர நிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.
அவற்றின் பாரம்பரிய மதிப்பை வருங்கால தலைமுறைகளுக்கும் அறியும் வகையில் உருவாக்கப்படும். இவற்றை கருத்தில் கொண்டு அடுத்த நூற்றாண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் 20 லட்சத்து சதுர அடி பரப்பளவில் ரூபாய் 1200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




