ஃப்ரீபையர் விளையாட தாய் செல்போனை கொடுக்காததால் சிறுவன் தற்கொலை..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனி முருகன். கூலித் தொழிலாளியான இவருக்கு 14 வயதில் மதன், 13 வயதில் பாலகுரு ஆகிய இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் பாலகுரு தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
மதன் மற்றும் பாலகுரு இருவரும் ஆன்லைன் வகுப்பை செல்போனில் படித்து வந்த நிலையில் அதன் பின் பப்ஜி விளையாட்டுக்கும் தடை செய்யப்பட்ட பின்னர் ஃப்ரீ பையர் விளையாட்டிற்கும் அடிமையாகியுள்ளனர். இதனால் செல்போனுக்கு சண்டையிடுவதை வழக்கமாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அவரது தாய் ஜோதிமணி மகன்கள் இருவருக்கும் விளையாடுவதற்காக செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். இந்தநிலையில் தந்தை சீனிமுருகன் வேலைக்கு சென்று விட்ட நிலையில் அண்ணன் மதன் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டதால் தனக்கு செல்போன் விளையாட கிடைக்கும் ஃப்ரீ பையர் விளையாடலாம் என்று நினைத்துள்ளார் பாலகுரு.
ஆனால் தாய் சோதிமணி வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் பாலகுருவிடம் செல்போனை கொடுக்காமல் கையோடு எடுத்துச் சென்றுவிட்டார். செல்போன் கிடைக்காத ஏக்கத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பாலகுரு மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கயிற்றால் தூக்கிட்டு விபரீத தற்கொலை முடிவைத் தேடிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
வெளியூரிலிருந்து திரும்பிய ஜோதிமணி தன் மகன் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.






