9, 11 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்..!
தமிழகத்தில் கொரொனா தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் முதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசின் அறிவிப்பின்படி கலை அறிவியல், தொழில்நுட்பம் , பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன.
இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்பு உட்பட அனைத்து வகுப்புகளும் இன்று முதல் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக விடுதிகளும் இன்று முதல் செயல் படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் ஜூன் மாதம் வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் திட்டமிட்டபடி 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.
பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள பள்ளிக் கல்வித்துறை ஒவ்வொரு மாணவர்களுக்கும் வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு விட்டமின் மாத்திரைகள், முககவசம் வழங்கப்பட வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.






