திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல்வராக முடியாது என மு.க.அழகிரியே தெரிவித்துள்ளார் : திமுகவுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்பி. வேலுமணி அழகிரியின் பேச்சை சுட்டிக்காட்டி பேச்சு !!!

கோவை தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலில் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் அதிமுக அரசு மீது அவதூறு பரப்பி வருவதாக திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்தும்,கோவை தேவராயபுரத்தில் திமுகவின் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண்னை அக்கட்சியின் தொண்டர்கள் தாக்கிய சம்பவத்தை கண்டித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,நடிகை விந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அதிமுக தொண்டர்களிடையே பேசினர்.

 

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், பொய்யான வாக்குதிகளை அளித்து மக்களை ஏமாற்றிய திமுக தலைவர் மு.க. ஸ்டானிலினை கண்டித்து நடைபெறுவது பொதுக்கூட்டம் அல்ல, மாநாடு என்றார்.

 

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் திரைப்பட நடிகை விந்தியா திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்றனர் என்ற அமைச்சர், தேவராயபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் அந்த ஊர் மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை எனவும்,வெளியூர்களில் இருந்து பேருந்துகள் மூலம் ஆட்கள் அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.மு.க. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை என்றவர், சட்டசபையில் முக.ஸ்டாலின் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியதில்லை என்றும் கூறினார்.

 

மேலும்,அதிமுக ஆட்சியை கலைக்க மு.க.ஸ்டாலின் முயன்றபோது தானும் அமைச்சர் தங்கமணியும் ஆட்சி நீடிக்க உறுதுணையாக இருந்ததாலும், குறுக்குவழியில் முதல்வராக முயன்ற முக.ஸ்டாலினுக்கு தாம் தடையாக இருந்ததாலும் தான் மு.க.ஸ்டாலின் தன்னைப் பற்றி விமர்சிப்பதாகவும் தெரிவித்தார்.

 

கோவையில் தற்போது எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என திட்டப்பணிகள் குறித்து விளக்கிய அமைச்சர்,
முக.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து கோவைக்கு என்ன செய்திருக்கிறார்? எனவும் கேள்வி எழுப்பினார்.

 

மேலும்,திமுக ஆட்சியில் கோவையில் செம்மொழி மாநாடு நடத்தி மக்கள் பணத்தை வீணடித்தனர் எனவும்,தமிழகத்தில எத்தனை ஊராட்சிகள் உள்ளது என்பது கூடத் தெரியாமல் கிராம சபை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசுவதாகவும் விமர்சித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுகவினர் பொதுமக்களிடம் பெறும் மனுக்கள் குப்பைத்தொட்டிக்கு செல்வதாகவும், திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல்வராக முடியாது என அவரது அண்ணன் மு.க.அழகிரியே தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Leave a Reply