மேட்டுப்பாளையம் : மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை விளாமரத்தூர் பகுதியில் இருந்து வழங்கவும்,திருப்பூர் 4 ஆம் குடிநீர் திட்டப்பணிகளை பவானிசாகர் அணையின் நீர்தேக்கப்பகுதிகளில் அமைக்கவும் மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியை சந்தித்து கோரிக்கை !!!

மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இக்குழுவினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர் இதன் தொடர்ச்சியாக கடந்த 4ம் தேதி மேட்டுப்பாளையம், சிறுமுகை,காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழு கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் சாமண்ணா வாட்டர் ஹவுஸ் மூலம் மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு தங்குதடையின்றி தினசரி சீரான குடிநீர் விநியோகம் செய்து வந்தது.

 

மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய தண்ணீர் எடுக்கப்படும், சாமண்ணா வாட்டர் ஹவுஸ் இடத்திற்கு கீழ் பகுதி மற்றும் மேல் பகுதியில் செக்டேம்கள் கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் இருந்து தொழிற்சாலைகளின் ரசாயன சாய கழிவுகள் மற்றும் குன்னூர் நகராட்சி கழிவுநீர் சாக்கடை கழிவுகள் தேக்கமான இப்பகுதி நீரில் கலந்து விடுகிறது. இந்த நீரை சுத்திகரித்தே மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 

மேலும்,மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வனபத்ர காளியம்மன் கோவில் அருகே செயல்பட்டு வரும் சாரதா டெர்ரி புராடெக்ட்ஸ்,மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் யுனைட்டெட் பிளீச்சர்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் பவானி ஆற்றில் கலக்கப்படுகிறது.

 

இந்த சாயக்கழிவு நீரில் பல்வேறு நச்சுத்தன்மை மிக்க அமிலங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வேதிப்பொருட்கள் நிரம்பி உள்ளன.இந்த நீரை பருகும் மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் பல்வேறெ உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

 

இந்த நீரில் அளவுக்கதிகமான பாக்டீரியா மற்றும் நச்சுக்கிருமிகள் கலந்திருப்பதாக பல பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகள் உள்ளது.கழிவுகள் கலந்த நீரை தூய்மைப்படுத்த அளவுக்கு அதிகமான படிகாரம், குளோரின் சேர்க்கப்படுகிறது.இந்த சுகாதாரமற்ற நீரை பருகுவதால் நமது பகுதி மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் மிக குறிப்பாக புற்றுநோய் வரை ஏற்பட்டு வருகிறது.மேலும்,தோல் சம்பந்தமான வியாதிகளும் வருகிறது.

 

மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு, குடிநீர் விநியோகம் செய்ய தண்ணீர் எடுக்கப்படும் பகுதிக்கு மேல் பகுதியிலிருந்து சுமார் 10க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இக்குடிநீர் திட்டங்களின் செயல்பாடுகளால் மேட்டுப்பாளையம் பகுதிவாழ் மக்களுக்கு நகராட்சி நிர்வாகத்தால் விநியோகம் செய்யப்படும் குடிநீர் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறையும், பல பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை எனவும் 18 வார்டுகளில் வாரம் ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறை எனவும் அதுவும் ஓரிரு மணி நேரங்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 

தண்ணீர் பற்றாக்குறையால் மேற்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் பணம் கொடுத்து கேன் குடிநீரையே வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.இதனால் அவர்களின் வருவாயில் பெரும்பகுதி தண்ணீருக்காக செலவிடும் சூழ்நிலை உள்ளது.

 

எனவே,ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லாத வகையில் மேட்டுப்பாளையம் பகுதி வாழ் மக்களுக்கு ரசாயன சாயக்கழிவுகளற்ற, சாக்கடை கழிவுகளற்ற தூய்மையான குடிநீரை நெல்லித்துறையை அடுத்துள்ள விளாமரத்தூர் பகுதியில் இருந்து நிரந்தரமாக வழங்கிட துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டத்தைப் பொறுத்தவரை திருப்பூர் மாவட்ட மக்களுக்கோ அல்லது கோவை மாநகராட்சி மக்களுக்கோ குடிநீர் கொடுக்க கூடாது என்பதல்ல.தங்கள் நோக்கம்  ஏற்கனவே கோவை, திருப்பூர் போன்ற பெரு நகரங்களுக்கும்,சுற்று வட்டாரங்களில் உள்ள பல சிற்றூர்களுக்கும் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து 17 குடிநீர் திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது.

 

இதன் காரணமாக மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளிலும் ஆற்றோர பகுதி மற்றும் சுற்றுப்புற கிராமப்புறப் பகுதிகளிலும் வாரம் ஒரு முறை இரண்டு மணி நேரம் கூட முறையாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழலில் உள்ளது என்பதனையும் தற்போது கோவை 3-வது குடிநீர் திட்டத்துக்காக பவானி ஆற்றில் சமயபுரம் அருகே மின்வாரிய மின்உற்பத்தி நிலைய தடுப்பணையில் இருந்து அரை கிலோ மீட்டர் முன் பகுதியில் நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டு நீர் எடுக்கப்பட உள்ளது.

 

மேலும்,திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட பணிகள் சாமண்ணா வாட்டர் ஹவுஸ் மேல்புறத்தில் இருந்தும் செயல்படுத்தப்பட உள்ளது.இவ்விரு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டால் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 17 குடிநீர் திட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும்.

 

மேட்டுப்பாளையம் நகரில் உள்ள பிரதான சாலைகள் அனைத்துமே மிக மிக குறுகலான சாலைகள் ஆகும்ஏற்கனவே பல்வேறு குடிநீர் குழாய்கள் தொலைத் தொடர்பு கேபிள்கள் இச்சாலைகளின் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தற்போது பாதாள சாக்கடை குழாய்களும் பதிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டால் சாலைக்கு அடியில் முழுமையாக இடம் இல்லாத இறுக்கமான சூழ்நிலை ஏற்படும் என்பதுடன்
மேற்கண்ட சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்கனவே சாலைக்கு அடியில் செயல்பாட்டில் இருந்து வரும் திட்டங்களுக்கும் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளதையும்,
அதே போல் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திருப்பூர் முதலாவது மற்றும் இரண்டாவது குடிநீர் திட்டங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு பழுதடையும் போது இத்துறை அதிகாரிகள் அசட்டையாக நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுவதன் காரணமாக மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய குடிநீர் ஆறு போல் ஓடி பலமாதங்களாக சாக்கடையில் கலந்து யாருக்கும் பயனில்லாமல் செல்வது மன வேதனையை அளித்து வருகிறது.

 

இவ்வாறு உடைபட்ட குழாயில் இருந்து வெளியேறும் நீர் அப்பகுதிகளில் சாலை முழுவதும் பரவி சாலைகளை முழுமையாக சேதமடைந்து வருவதால் சாலைகளில் செல்லும் பாதசாரிகளும் விபத்துக்கு உள்ளாகி விடுகின்றனர்.இதுகுறித்து ஒவ்வொரு முறையும் போராடியே இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டியுள்ளது என்பதனை தெளிவாக முன் வைக்கப்பட்டது.

 

மேலும்,திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்க மேட்டுப்பாளையம் நகர் பகுதிக்குள் சாலைகள் தோண்டப்பட்டால் வணிகர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே கொரோனா பெரும் தொற்றால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதார ரீதியில் மிக மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே,திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டத்தை இனி வரும் காலங்களில் பவானிசாகர் அணையின் நீர்தேக்கப்பகுதியில் இருந்தே திட்டமிடப்பட்டு செயல்படுத்த வேண்டும் வலியுறுத்தி மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.


Leave a Reply