தனுஷின் பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு?
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014ம் ஆண்டு ரூ.3.7 கோடி மதிப்பில் அளித்த 13.5 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி நிகழ்வுக்காக இந்த கவசத்தை அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் கையெழுத்திட்டு எடுத்துச்சென்று, தேவர் சிலைக்கு அணிவிப்பர்.
அதன்படி இந்தாண்டும் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி, 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்பி தர்மர் ஆகியோரும், நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளும் இணைந்து கவசத்தை பெற்றனர். போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கொண்டு செல்லப்படும் கவசம், நிகழ்வு முடிந்து பின்னர் நவம்பர் 1 அன்று மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படும்.
தங்கக் கவசத்தை ஒப்படைத்த பின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “தவெக ஆட்சியில் அசுர வேகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், லஞ்சம் அதிகம் நடக்கிறது. காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை. திமுக 25 ஆண்டுகள், அதிமுக 31 ஆண்டுகள் என சிறப்பான ஆட்சிகளை கொடுத்துள்ளோம். ஆனால், இப்போதைய ஆட்சியில் அரிசி, எண்ணெய் என அனைத்து விலையும் உயர்ந்துவிட்டது. மழை பாதிப்புகளை நாம் டிவி பார்த்து தெரிந்துகொள்வது போல, அவர்களும் டிவியை தான் பார்க்கிறார்கள். பேப்பரில் தான் செய்தி வருகிறது. சரியான நடவடிக்கை இல்லை.
நடிகர் தனுஷை பார்த்து ஆளும்கட்சி பதட்டமடைகிறது. நடிகர் விஜய்யிடம் ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள். அடுத்து தனுஷிடம் கொடுத்துவிடுவார்களோ என்று பதட்டமடைகின்றனர். தனுஷின் பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு? இந்தியாவில் பெரிய கட்சி பாஜக. அந்த கட்சி தலைவர்களை தனுஷ் பார்ப்பதில் என்ன தவறு? நாங்களும் பாஜக கூட்டணியில் தான் உள்ளோம். தனுஷ் அதிமுகவிற்கு வருவாரா? பாஜகாவிற்கு வருவாரா என கேட்கிறார்கள் பாஜகவில் இருந்தால் தவறு ஒன்றுமில்லை.
அதிமுக இருக்கிறதா என கேட்கும் நிர்மல்குமாருக்கு கண் தெரியுமா? பரமசிவன் பாம்பு கழுத்தில் இருக்கும் பாம்பு போல மாறியுள்ளார் நிர்மல்குமார். அதிமுக என்பது தனிப்பட்ட பலம். இடை தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் தனது வாக்கை தக்க வைத்துள்ளது அதிமுக.
நாங்கள் தான் நிரந்தரமாக இருப்போம், அதிமுகவிற்கு டெபாசிட் கிடைக்காது என்றார் நிர்மல்குமார். ஆனால், அவரது கூட்டணி கட்சிதான் டெபாசிட் இழந்துள்ளது. அதிமுகவில் இருந்து 3 பேர் தான் சென்றுள்ளனர் அவர்களுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. அதிமுக என்ற இந்த ரயில் செங்கோட்டை டெல்லிக்கு போய்கிட்டு இருக்கிறது. ஏறிக்கொண்டால் எல்லோரும் பத்திரமாக சேரலாம். பல விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டு சிலர் வந்திருக்கிறார்கள். அதற்கு பின்னாலும் ஒழுங்காக நடக்கவில்லை என்றால் பொதுச்செயலாளர் நடவடிக்கை எடுப்பார்” இவ்வாறு தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





