--- --:--:-- --

யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயில் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டது : எதிர்ப்பு தெரிவித்து மக்களும்,சமூக ஆர்வலர்களும் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு !!!

5

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை நீலகிரி மலை இரயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது.சுற்றுலாப் பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த இரயிலுக்கு பாரம்பரிய சின்னமான யுனெஸ்கோ சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மலை இரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் மலை இரயில் போக்குவரத்து மீண்டும் துவங்குவது குறித்து தென்னக இரயில்வே நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் TN 43 என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மலை இரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

தற்பொழுது வார இறுதி நாட்களில் மட்டும் இயக்க திட்டமிட்டுள்ள தனியார் நிறுவனத்தினரால் கடந்த 5 , 6-ம் தேதி இரண்டு நாட்கள் மலை இரயில் போக்குவரத்து நடைபெற்றது.அதில் உதகை வரை செல்ல பயணக்கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூபாய் மூன்றாயிரம் ( ரூ.3000) வசூல் செய்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

இந்த ரயிலில் விமானங்களில் உள்ளது போல பணிப்பெண்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பயணிகளுக்கு 2 ஸ்நாக்‌ஸ் பாக்கெட்டுகளும்,ஒரு வாட்டர் பாட்டிலும் வழங்கப்படுகிறது.

 

மேலும்,எதிர்காலத்தில் இந்தக் கட்டணத்தை எட்டாயிரத்திலிருந்து பனிரெண்டாயிரம் வரை உயர்த்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இரயில்வே நிர்வாகம் உதகை வரை பயணக் கட்டணமாக ரூ.30 பெற்று வந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் கட்டணக்கொள்ளை அனைவரிடமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து மலை இரயிலை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கிய இரயில்வே நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து 160 சுற்றுலாப் பயணிகளுடன் இன்று உதகை செல்ல இருந்த மலை இரயிலை மறிக்க முயன்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்பினர் மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். மேலும்,தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து, இரயில்வே நிர்வாகம் நேரடியாக மலை இரயிலை இயக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon