--- --:--:-- --

கோவை : தொண்டாமுத்தூர் அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி முதியவர் மரணம்: இருவர் படுகாயம்.வனத்துறையினர் விசாரணை !!!

3

கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்  ஏராளமான யானை,காட்டெருமை,புலி,சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் உணவிற்காக அவ்வப்போது மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள ஊர்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதுடன் மனித , வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிர் சேதமும் அவ்வப்போது  ஏற்படுகிறது.

 

இந்த நிலையில் இன்று அதிகாலை தொண்டாமுத்தூரை அடுத்த ஓணாப்பாளையம் யானை மடுவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று தாளியூர் , குளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட சோளம் , வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது.

 

பின்னர்,வனப்பகுதிக்கு செல்லாமல் மக்கள்  செல்லும் சாலையில் இன்று அதிகாலை நடந்து வந்தது. அதிகாலை வேலையில் நடைப்பயிற்சி சென்ற சிலர் யானையை கண்டு ஓட்டம் ‌பிடித்தனர்.
இது குறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறைக்கு தகவல் கொடுத்து அதிகாரிகள் யானையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.‌

 

இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு தொண்டாமுத்தூர் அரசு கலைக்கல்லூரி எதிரில் உள்ள வஞ்சிமாநகர்‌ பகுதியில் யானை வந்தது.அப்போது,அதே பகுதியில்  வசிக்கும் ஆறுமுகம் (75) என்பவர்‌ கடைக்கு செல்ல வீட்டை வீட்டு வெளியே வந்தார். ரோட்டில் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்து திரும்ப வீட்டிற்கு செல்ல முயன்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த காட்டு யானை ஆறுமுகத்தை துதிக்கையில் பிடித்து இழுத்து காலால் மிதித்து கொன்றது. ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த ஆறுச்சாமி (19) , முத்து (18) ஆகிய இருவரையும் யானை தாக்கியது .‌இதில் இருவரும் காயத்துடன் உயிர் தப்பினர்.

 

யானையை கண்ட ஊர் மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.பின்னர், யானையை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் துரத்தி சென்றனர். காயம் அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பொதுமக்களும் வனத்துறையினரும் யானையை  விரட்டி சென்றனர். பலமுறை போக்கு காட்டிய யானை அருள் ஜோதி நகர் வழியாக சென்று முத்தி பாளையம்  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் கேட்டை உடைத்து மதில் சுவரை இடித்துத் தள்ளியது. அதிக கோபத்துடன் காணப்பட்ட யானை ஒரு கட்டத்தில் பிளிறியபடி பொதுமக்களை விரட்டத் துவங்கியது.சிறிது நேரம் கழித்து சற்று கோபம் அடங்கிய யானையை அட்டுக்கல் வனப்பகுதி வரை விரட்டி சென்று விட்டனர்.

 

கடந்த 20  நாட்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் இதேபோன்று அதிகாலை காலை கடன் கழிக்க சென்ற பெண்ணை யானை தாக்கி கொன்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தொண்டாமுத்தூர் பகுதியில் அடுத்தடுத்து யானை தாக்கி உயிரிழந்து வருவது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon