விஷப் பாம்பை முகத்தில் தேய்த்தால் கருவளையம் நீங்கும் என கூறி ஏமாற்றிய கும்பல் ..!
புதுச்சேரியில் முகத்தில் உள்ள கருவளையத்தை நீக்குவதாக கூறி பாம்பாட்டிகள் சிலர் விஷம் நிறைந்த நாகப்பாம்பை முகத்தில் தேய்த்து இளைஞர்களை ஏமாற்றிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்புதூர் பகுதியை சேர்ந்த குமரேசன் உள்ளிட்ட பாம்பாட்டிகள் அண்மையில் புதுச்சேரி திருபுவனை பகுதியில் முகாமிட்டு இவ்வாறு இளைஞர்களை ஏமாற்றி காசு பார்த்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விஷப்பாம்பை முகத்தில் தேய்த்தால் போதும் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் எனக்கூறி இளைஞர்களை குறிவைத்து இந்த பாம்பாட்டிகள் 100 ரூபாய் முதல் வசதிக்கேற்றவாறு கட்டணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர பாம்பு முட்டையில் உள்ள மஞ்சள் கரு கலந்த மருந்து என கூறி களிம்பு ஒன்றை நல்ல விலைக்கு விற்று அந்த பாம்பாட்டிகள் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.






