கொரொனா தடுப்பூசிக்கான 30 கோடி பயனாளிகளை கண்டறியும் பணிகள் நடைபெறுகிறது..!
மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக போடவிருக்கும் கொரொனா தடுப்பூசிக்கான 30 கோடி பயனாளிகளை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரொனா தடுப்பூசி கண்டறியும் பணிகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தீவிரமடைந்துள்ளன.
தடுப்பூசி வெற்றிகரமாக கண்டறியப்பட்ட பிறகு 30 கோடி பேருக்கு போட முடிவு செய்துள்ள மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் பயனாளிகளின் பட்டியலை தயாரித்து வருகிறது. மாநில அரசுகள் தனியே கொள்முதல் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஒரு கோடி பேர், மாநகராட்சி பணியாளர்கள், காவல்துறையினர் 2 கோடிப்பேர், 50 வயதிற்கு மேற்பட்ட 26 கோடி பேர் மற்றும் இதர நோய்களை கொண்ட 50 வயதுக்கு குறைவானவர்கள் ஒரு கோடி பேர் என பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் பட்டியலை இறுதி செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.






