--- --:--:-- --

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

12

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் இதன் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 23-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கீழவளவு, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, திருவாதவூர், கிடாரிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது.

 

தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் கனமழை பெய்தது. சுற்றுவட்டார இடங்களான சத்திரப்பட்டி, தளவாய்புரம், அழகிரி உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பொழிந்து உள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மூன்றாவது நாளாக மழை பெய்துள்ளது, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் மழை கொட்டி தீர்த்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon