அக்.31 வரை மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..! சென்னை மாநகராட்சி திட்டவட்டம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரோனா காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படும் மெரினா கடற்கரையில் இம்மாதம் 31-ந் தேதி வரை தடை நீடிக்கும் என சென்னை மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

 

உலகின் 2-வது மிக நீளமான அழகிய கடற்கரையான மெரினா, சென்னை வாசிகள் மற்றும் சுற்றுலாவாசிகளின் முக்கியமான பொழுதுபோக்கு இடமாகும். தினமும் மக்கள் கூட்டத்தில் களை கட்டி காணப்படும் மெரினா கடற்கரை, கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட தடையால் களையிழந்து காணப்படுகிறது.இந்த தடையால் மெரினாவை நம்பியுள்ள சிறு வியாபாரிகள், மீன் வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மெரினாவிலும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. கடந்த வாரம் இந்த வழக்கின் விசாரணை நடந்த போது, மெரினா வை திறப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பொழுது போக்கு இடங்கள், பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவற்றுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் மெரினாவிலும் அக்.31-ந் தேதி வரைக்கும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து விசாரனையை நவம்பர் 31-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Leave a Reply