கர்நாடக மாநில காங். தலைவர் டி.கே.சிவகுமார் வீடுகளில் சிபிஐ ரெய்டு…15 இடங்களில் அதிரடி சோதனை!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார்.குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்தவர். குமாரசாமி அரசை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட பல முயற்சிகளை முறியடித்ததில் சிவக்குமாருக்கு முக்கியப் பங்கு உண்டு. கடைசியில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது, சிவக்குமார் மீது பல்வேறு ஊழல் வழக்குகள், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகள் என ஏராளமான வழக்குகள் இவர் மீது போடப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார்.

 

இந்நிலையில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் டி.கே. சிவக்குமார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பெங்களூருவில் 9, டெல்லியில் 4 இடங்கள், மும்பையில் உள்ள வீடு, அலுவலகம் மற்றும் அவருடைய சகோதரர் டி.கே.சுரேஷ் மற்றும் உறவினர வீடுகளில்  என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடை பெற்று வருகிறது. இந்த சோதனையில் ரூ 50 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதற்கிடையே இந்த சிபிஐ சோதனைக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில் பாஜக அரசின் கைப்பாவையாக சிபிஐ செயல்படுவதாக குற்றச்சாட்டு கூறி உள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளார்.


Leave a Reply