திமுக கூட்டணியில் மாற்றம் வருமா? கொளுத்திப் போட்ட துரைமுருகன்..! உள்ளே யார்? வெளியே யார்?அரசியல் கட்சிகளிடையே திடீர் பரபரப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்


ரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மாற்றம் இருக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் திடீரென கொளுத்திப் போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளில் வெளியேறப் போவது யார்? புதிதாக உள்ளே வரப் போவது யார் என சூடான விவாதங்களும் ஹேஸ்யங்களும் அரசியல் கட்சிகளிடையே பரபரத்துக் கிடக்கிறது.

 

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.கட்சிகளிடையே கூட்டணிக் கணக்குகளும் ஜரூராகி விட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை இரு பெரும் திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை தலைமையின் கீழ் தான் இரு பெரும் கூட்டணிகள் என்பது கடந்த அரை நூற்றாண்டு கால அரசியல் வரலாறாகி விட்டது. மூன்றாவது கூட்டணி என்பது தமிழகத்தில் எடுபடாது என்ற நிலை தான் உள்ளது.

 

1977 தேர்தலில் திமுகவுக்கும் எம்ஜிஆர் தோற்றுவித்து முதல் களம் கண்ட அதிமுகவுக்கும் கடும் போட்டி நிலவினாலும், காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டது. ஆனால் காங்கிரஸ் கரை சேரவில்லை. பின்னர் 1980-ல் திமுகவுடனும், 1984-ல் அதிமுகவுடனும், அதைத் தொடர்ந்து இந்த இரு கட்சிகளுடனும் தொடர்ந்து கூட்டணி சவாரி செய்து வருகிறது காங்கிரஸ். இடையில் எம் ஜி ஆர் மறைவுக்குப் பின் அதிமுக (ஜா), அதிமுக (ஜெ) என பிளவுபட்ட நிலையில் 1989-ல் நடந்த தேர்தலில் மட்டும் மீண்டும் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி முயன்றும் முடியவில்லை. அதன் பிறகு கூட்டணி சவாரி தான் என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்து விட்டது.

 

இடையில் 1996-ல் திமுக உடைந்து வைகோ மதிமுகவை தொடங்கிய போது மார்க்சிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகளுடன் 3-வது அணி அமைத்தார். அதுவும் எடுபடவில்லை. 2005-ல் தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கிய விஜயகாந்த், 2006 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றதன் மூலம் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3 -வது சக்தியாக விஸ்வரூபமெடுப்பார் என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்றார் போல் 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தல், பின்னர் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள், 2009-ல் நடந்த மக்களவைத் தேர்தல்களில் தேமுதிக வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்தே வந்தது.

 

இதனால், 2011 சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்த் மாபெரும் சக்தியாக திகழப் போகிறார் என்றெல்லாம் பேச்சு எழ, அவருக்கு மவுசும் அதிகரித்தது. ஆனால் இரு திராவிட கட்சிகளும் இன்னொரு கட்சி வளர்வதை, அதுவும் விஜயகாந்த் வளர்வதை விட்டு விடுமா என்ன? இரு கட்சிகளுமே தங்களுடன் விஜயகாந்த்தை கூட்டணியில் இடம் பெறச் செய்ய மாறி மாறி வலை விரித்தன.

 

இது சூழ்ச்சி வலை என தெரியாமல் விஜயகாந்தும் ஜெயலலிதா விரித்த வலையில் வீழ்ந்து அதிமுகவுடன் கூட்டணி கண்டார். அந்தக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதல்வரானார். விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் ஆனார். ஆனால், தேர்தல் முடிந்து ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் விஜயகாந்தை மட்டம் கட்டத் தொடங்கிய ஜெயலலிதா கடைசியில் அக்கட்சி எம்எல்ஏக்கள் பலரை அதிமுக பக்கம் திருப்பி கடைசியில் கட்சியையே கிளீன் போல்டு செய்து விட்டார்.

 

 

இதனால் தேமுதிக கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக பலவீனமடைந்தது. ஆனாலும் 2016 தேர்தலிலும் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திமுக படாதபாடு பட்டது. ஆனால் வைகோ பேச்சை நம்பி, மீண்டும் ஒரு 3-வது அணியை மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் இரு கம்யூனிஸ்டுகள், வைகோ, திருமாவளவன் ஆகியோருடன் சேர்ந்து விஜயகாந்த் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டணி பெரிய அளவில் பேசப்பட்டாலும் ரிசல்ட் என்னவோ பூஜ்யம் தான். இந்தக் கூட்டணியால் கலைஞர் கருணாநிதி தனது இறுதிக் காலத்தில் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பை தட்டிப்பறிக்க முடிந்தது தான் லாபம் எனலாம். திமுக ஆதரவு வாக்குகளைப் பிரித்து ஜெயலலிதா தொடர்ந்து 2வது முறையாக அரியணை ஏற இந்தக் கூட்டணி காரணமாக இருந்து விட்டது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

திமுக கூட்டணி அமோக வெற்றி

 

தற்போது 2021 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மீண்டும் ஒரு சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன. இப்போதே கூட்டணிக் கான முஸ்தீபுகளும் தொடங்கி விட்டன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டுகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு கட்சி, முஸ்லீம் லீக் போன்றவை இடம் பெற்றிருந்தன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

 

வரும் சட்டசபைத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடருமா? என்பது பெரும் சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, இம்முறை அதிக இடங்களில் போட்டியிட காய் நகர்த்துகிறது. இதற்காக அதிமுகவுக்கு கொடுக்கும் நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பது நாடறிந்த உண்மை. தற்போது முதல்வர் வேட்பாளர் சர்ச்சை அதிமுகவில் பெரிய அளவில் வெடித்தத்ற்கு ஓபிஎஸ்சை தூண்டி விடுவதே பாஜக தான் என்றும் கூட கூறப்படுகிறது.

 

இப்படி அதிமுகவில் நெருக்கடி ஏற்படுத்தி 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு குளிர் காய பாஜக காய் நகர்த்துவதாக பேச்சு . இதனால் ஒரு வேளை இபிஎஸ் அணி அதிமுகவில் காலூன்றினால் பாஜகவை கழட்டி விட்டாலும் ஆச்சர்யமில்லை. மேலும் அதிமுக கூட்டணியில் தற்போது வரை உள்ள தேமுதிக, பாமக ஆகியவையும் கூட்டணியில் தொடருமா? என்பது கடைசி வரை சஸ்பென்ஸ் தான்,

 

    கொளுத்திப் போட்ட துரைமுருகன்

 

 

இந்நிலையில் தான் திமுக பொதுச் செயலாளர் பொறுப்பில் அமர்ந்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவரான துரைமுருகன், திடீரென உதிர்த்துள்ள வார்த்தைகள் தற்போது விவாதமாகியுள்ளது. திமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று அவர் கூறியுள்ளதுதான் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.

 

வன்னியரான துரைமுருகன், வட மாவட்டங்களில் செல்வாக்குடன் உள்ள வன்னியர் கட்சியான பாமகவை மனதில் வைத்தே இனத கூறியுள்ளதாக பார்க்கப்படுகிறது. பாமகவுடன் கூட்டணி கண்டால் வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகள் அத்தனையையும் மொத்தமாக அள்ளலாம் என்பது திமுக கணக்காக உள்ளது.

 

இதனால் தொண்டர்கள் பலம், வாக்கு வங்கி இல்லாத காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை தாரை வார்ப்பதற்கு பதில், அக்கட்சியை கூட்டணியில் கழட்டி விடலாம் என்பது துரைமுருகன் போடும் கணக்கு . அதே போல் பாமகவை கூட்டணியில் சேர்க்கும் பட்சத்தில் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் தாமாக ஓட்டமெடுக்கும் என்றும் தெரிகிறது. இதனால் பாமகவை மனதில் வைத்தே துரைமுருகன், திமுக கூட்டணியில் மாற்றம் இருக்கலாம் என்று கூறியிருக்கலாம் என்று பரபரப்பான விவாதங்கள் தூள் பறக்கின்றன. கூட்டணிக் கணக்குகள் மாறுமா? என்பது தேர்தல் நெருங்க, நெருங்க தெரியத்தான் போகிறது.


Leave a Reply