--- --:--:-- --

“கிடுகிடு”வென 136 அடியை தாண்டிய பெரியாறு அணை…! அலறும் கேரளா…! தண்ணீரை வெளியேற்ற நெருக்கடி!!

w46

பெரியாறு அணையின் நீர்மட்டம் 6 நாட்களில் 20 அடிக்கும் மேலாக கிடு கிடுவென உயர்ந்து 136 அடியை தாண்டியுள்ளது. மேலும் நீரைத் தேக்கினால் இடுக்கி மாவட்டத்தில் குடியிருப்புகளுக்கு வெள்ள ஆபத்து எனக் கூறி கேரளா அலறுகிறது. இதனால் அணைக்கு வரும் நீரை மேலும் தேக்காமல் தமிழகப் பகுதிக்கு அப்படியே திறந்து விடுமாறு கேரளா நெருக்கடி கொடுத்துள்ளது.

 

கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி பகுதியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை . பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பென்னி குயிக் என்ற புண்ணியவானால் கட்டப்பட்டது இந்த அணை. 152 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர், தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக பயன்பெறும் வகையில் கட்டப்பட்டதாகும். அப்படித்தான் ஒப்பந்தமும் உள்ளது.

 

ஆனால் இந்த அணையில் முழு அளவுக்கு நீரைத் தேக்குவதில் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வந்தது.136 அடிக்கு மேலாக தேக்கினால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரும் நிலப்பரப்பு மற்றும் குடியிருப்புகள் நீரில் மூழ்கும் என்பதால் கேரளா பிரச்னை செய்து வந்தது. பெரியாறு அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஏராளமான கட்டடங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதே இதற்கு காரணம். இதனால் உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள், மத்திய அரசுத் தரப்பில் பல்வேறு குழுக்கள் போடப்பட்டு இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

 

இதனால் பெரியாறு அணையில் நீண்ட காலமாக 136 அடி வரை மட்டுமே தீர்த் தேக்கப்பட்டு வந்த நிலையில், 142 அடி வரை நீர் தேக்கலாம் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதே வேளையில் 139.99 அடியை எட்டியவுடன் நீர்வரத்தைப் பொறுத்து அதிக அளவு தண்ணீரை தமிழகப் பகுதிக்கு வெளியேற்றவும் உச்ச நீதிமன்றம் உத்தாவிட்டிருந்தது.

 

ஆனாலும் 136 அடிக்கு மேல் அணை நீர்மட்டம் உயர்ந்தவுடன் கேரள அரசு பிரச்னை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஏனெனில் கடந்த 2018-ல் அணை நீர்மட்டம் 138 அடியை தாண்டிய நிலையில் திடீர் கனமழையால் நீர் வரத்து பெருமளவு அதிகரித்தது. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குறிப்பிட்ட அளவுதான் வெளியேற்ற முடியும் என்பதால் பெருமளவு நீர் இடுக்கி அணைக்கு திருப்பி விடப்பட்டது.

 

இதனால் இடுக்கி அணையும் நிரம்பி அதிக நீர் வெளியேற்றப்பட்டதால் இடுக்கி மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது. இதனாலேயே 136 அடியை பெரியாறு அணை நீர்மட்டம் எட்டியவுடன் கேரளா அலறத் தொடங்குகிறது.

 

இந்த ஆண்டும், கடந்த 3-ந்தேதி வரை அணை நீர்மட்டம் 115 அடிக்கு கீழாகவே இருந்தது. ஆனால் கடந்த 6 நாட்களாக கொட்டித்தீர்த்த கன மழையால் அணை நீர்மட்டம் விறு விறுவென 21 அடி உயர்ந்து நேற்றிரவு 136 அடியை தாண்டியது. வழக்கம் போல ஏற்கனவே இரு நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு கேரள அரசு எழுதிய கடிதத்தில், 136 அடிக்கு மேல் நீர்மட்டம் உயரும் போது தமிழகப் பகுதிக்கு கூடுதலாக நீரைத் திறக்க வலியுறுத்தி இருந்தது.

 

ஆனால் தமிழக அரசுத் தரப்பில் இதற்கு சம்மதித்ததாக தெரியவில்லை. இந்நிலையில் நேற்றிரவு முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 136 அடியைத் தாண்டிய நிலையில் இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷ், தேனி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேரள அரசும் கூடுதல் நெருக்கடி தரத் தொடங்கினாலும் தமிழக அரசோ, கேரளாவின் நெருக்க டிக்கு பணியாமல் உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி 139.99 வரை நீரைத் தேக்க முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது.

 

அதன்படி இன்று காலை பெரியாறு அணை நீர்மட்டம் 136.2 அடியாக உயர்ந்த நிலையில், நீர் வரத்து 13400 கன அடியாகவும், நீர் திறப்பு 1650 கன அடியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்வதால் அடுத்த ஓரிரு தினங்களில் 140 அடியை எட்டும் போது, கேரளாவின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon