தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 2,626 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஒரே நாளில் 4 ஆயிரத்து 965 பேருக்கு நோய் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களில் ஆயிரத்து 130 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எனினும் சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது ஆறுதலான விசயம். பிற மாவட்டங்களில் 3 ஆயிரத்து 835 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக உள்ளது. அதில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் டிஸ் ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 70.12 விழுக்காடாக இருக்கிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் விகிதம் 1.45 விழுக்காடாக உள்ளது.
51 ஆயிரத்து 344 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னைக்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டத்தில் 366 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 360 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 269 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 262 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 256 பேரும் ஒரே நாளில் நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.