சென்னையின் ஈஞ்சம்பாக்கத்திலுள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் நடத்திய சோதனையில் வெடிகுண்டு ஒரு புரளி என்பதும் தெரியவந்துள்ளது. தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மதியம் அடையாளம் தெரியாத ஒரு நபர் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது சென்னை ஈஞ்சம் பாக்கத்தில் இருக்கக்கூடிய நடிகர் அஜித் குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதன்பின் இணைப்பை துண்டித்துவிட்டார். அதன் பிறகு காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து நீலாங்கரை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நீலாங்கரை காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ஈஞ்சம்பாக்கத்தில் இருக்க கூடிய அஜீத் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். வெளியில் இழுக்கக்கூடிய பகுதி முழுவதுமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த சோதனையில் அது புரளி என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று கூறி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் அவர் விழுப்புரத்தை சேர்ந்த நபர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனடியாக நீலாங்கரை போலீசார் விழுப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் போலீஸார் அந்த நபரை பிடிப்பதற்காக அந்த முகவரிக்கு சென்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் அந்த மிரட்டல் விடுத்த நபர் ஏற்கனவே பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் கூட அவர் கைதாகி சிறைக்கு சென்று மீண்டும் வெளியே வந்த பிறகு தற்போது மிரட்டல் விடுத்துள்ளார். எனவே அவர் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.