தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.கோவையிலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கோவையில் இதுவரை 1600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மருத்துவர்கள் மற்றும் மக்களை மட்டுமே குறி வைத்த வைரஸ் தற்போது காவல் துறையினரையும் விட்டு வைக்கவில்லை.கோவை மாவட்டத்தில் இதுவரை 20 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஏற்கனவே போத்தனூர்,துடியலூர்,மதுக்கரை,சூலூர்,உக்கடம் பகுதிகளில் செயல்பட்டு வரும் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அக்காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வேறொரு இடத்தில் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காவலருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து டி.எஸ்.பி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.தற்காலிகமாக டி.எஸ்.பி அலுவலகம் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை வடக்கு கோட்டாட்சியர் சுரேஷ் கூறுகையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காவலர் மேட்டுப்பாளையம் காவலர் குடியிருப்பில் தங்கியிருந்த பகுதி முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது எனவும்,அவரது டிராவல் ஹிஸ்டரி முழுவதும் ஆராய்ந்து அவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
காவலர்களுக்கு கொரோனா தொற்றின் காரணமாக கோவையில் இதுவரை காவல் நிலையங்கள் மட்டுமே மூடப்பட்டு வந்த நிலையில் தற்போது டி.எஸ்.பி அலுவலகம் மூடப்பட்டுள்ளது காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.