ஸ்வப்னா சுரேசிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணை..!
ஒட்டுமொத்த கேரளாவையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய நபரான சுரேசிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த கேரள தொழில்நுட்ப துறை முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் மற்றொரு நபரான சந்திப் நாயர் ஆகியோர் அண்மையில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.
14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களை எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கேரளா என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.ஸ்வப்னா சுரேஷின் சகோதரர் திருமண நிகழ்ச்சி மற்றும் அதன் பின்னர் நடந்த மது விருந்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை அதிகாரிகள் செய்து வருகின்றனர் தொழிலதிபர்கள் நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களையும் என்ஐஏ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். அத்துடன் கேரள ஐடி துறை முன்னாள் அதிகாரி சிவசங்கர் உடன் ஏற்பட்ட தொடர்பு ஐஎஸ் தீவிரவாதிகள் உடனான தொடர்பு மற்றும் கடத்தல் தங்கம் யார் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
கடத்தல் தங்கத்தை தமிழ்நாட்டில் உள்ளவர்கள் யாரேனும் வாங்கினார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஸ்வப்னா செய்துள்ள முதலீடுகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. தகவல்களை முழுமையாக சேகரித்த பின் ஸ்வப்னா சுரேஷிடம் கிடுக்குபிடி கேள்விகளால் துளைக்க வேண்டும் என்பதே என்ஐஏ அதிகாரிகளின் திட்டமாகும்.






