--- --:--:-- --

 “இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி உரை!!” சீனாவுடனான மோதல் முற்றும் நிலையில் என்ன சொல்லப் போகிறார் என பெரும் எதிர்பார்ப்பு!!

9.1

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்த உள்ளார். சீனாவுடனான மோதல் போக்கு முற்றி வரும் நிலையில், அவரது உரையில் சீனா குறித்த முக்கிய அம்சங்கள் இடம் பெறலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியதும், பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டு மக்களிடையே அடிக்கடி உரை நிகழ்த்தி வருகிறார். இந்நிலையில் கொரோனா பரவல் இந்தியாவில் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் அட்டூழியம் பெரும் சவாலாக அமைந்துள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் ஆக்ரமிப்பு நடத்தும் சீனாவில் சூழ்ச்சியை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர்.

 

சீன வீரர்களுடன் தீரத்துடன் மல்லுக்கட்டி விரட்டியடித்த போது இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்த நிலையில், சீனாவின் தரப்பிலோ இரு மடங்குக்கும் மேல் உயிரிழப்பு நீகழ்ந்தது. இந்த மோதலைத் தொடர்ந்து இரு தரப்பு ராணுவத் தரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், சீனாவின் அடாவடிகள் தொடர்கின்றன. இதனால் லடாக் விவகாரம் நீறு பூத்த நெருப்பாக உள்ள நிலையில் எந்த நேரமும் பெரும் மோதல் வெடிக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவும் எதற்கும் தயார் என்பது போல் எல்லைப் பகுதிக்கு பெருமளவு ராணுவ நகர்வை மேற்கொண்டுள்ளது. இதனால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

 

இச்சூழலில் சீனாவுக்கு பதிலடி தரும் வகையில், டிக் டாக், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று திடீர் தடை விதித்தது. இந்த சீன செயலிகளால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கருதி மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடியால் சீன செயலி நிறுவனங்களுக்கு பெரும் பொருளாதார பாதிப்பு நிச்சயம் இதனால் சீனத் தரப்பிலும் பதிலுக்கு வேறு மாதிரியான உடனடி ரியாக்சன் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்த உள்ளார் என்ற அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. பிரதமரின் உரையில் இடம் போகும் அம்சம் என்ன என்பது குறித்து குறிப்பிடாமல் ஒரே வரியில், பிரதமர் மோடி மாலை 4 மணிக்கு உரை என்று மட்டும் பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சீன விவகாரம் தொடர்பாக அதிரடி அறிவிப்பை பிரதமர் மோடி தனது உரையில் தெரிவிப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

அதே வேளையில் நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்றிரவு உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு மற்றும் பொருளாதார பாதிப்பை மீட்டெடுப்பது தொடர்பாகவும் முக்கிய அம்சங்கள் பிரதமரின் உரையில் இடம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரதமர் மோடி தனது உரையில் என்ன சொல்லப் போகிறார் என்பது அனைத்து தரப்பினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon