தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரூ.441 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரூ.441 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன.பண்டிகைகள் என்றாலே மதுப்பிரியர்களுக்கு கூடுதல் உற்சாகம். அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு மதுப்பிரியர்கள் காலை முதலே டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுத்தனர். கடை திறப்பதற்கு முன்பாகவே அப்பகுதிகளில் ஆஜராகினர். தீபாவளியை முன்னிட்டு கடந்த 7-ம் தேதி சனிக்கிழமை அன்று மட்டும் தமிழ்நாட்டில் ரூ.234.75 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தீபாவளியான ஞாயிற்றுக்கிழமை ரூ.206.63 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தமாக 2 நாட்களில் ரூ.441.38 கோடிக்கு தமிழகத்தில் மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 9 மாவட்டங்கள் அடங்கிய திருச்சி மண்டலத்தில் 98 கோடியே 97 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்கள் அடங்கிய இந்த மண்டலத்தில் ரூ.98 கோடியே 97 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கிறது. சென்னை மண்டலத்தில் ரூ.95 கோடியே 85 லட்சம், மதுரை மண்டலத்தில் ரூ.88 கோடியே 38 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.87 கோடியே 52 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.70 கோடியே 66 லட்சம் என மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





