தண்டனை கிடைத்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் கதறல்!
சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்தி வந்த ஜெயராஜ் இவரது மகனான செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் இருவரும் பொது முடக்க நேரத்தை கடந்து கடையை திறந்து வைத்து இருந்ததாக கைது செய்யப்பட்டனர்.
பின்னர் கோவில்பட்டி சிறையில் தந்தையும் மகனும் அடைக்கப்பட்டனர். ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் இருந்த நிலையில் முதலில் பென்னிக்ஸ் உயிர் இழந்தார். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாயன்று காலை உயிரிழந்தார். இதையறிந்த உறவினர்களும், வணிகர்களும் சாத்தான்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து இரண்டு பேர் உயிரிழப்பு தொடர்பாக உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.
இதனிடையே தந்தை மற்றும் மகன் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மருத்துவர்களுடனான ஆலோசனைக்கு பிறகு கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அங்கு வந்த ஜெயராஜ் உறவினர்கள் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்தால் போதாது. இரட்டை கொலை செய்தால் சாதாரண நபருக்கு என்ன தண்டனை கிடைக்குமோ அதே தண்டனை சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறினர்.
இதனையடுத்து நடுவர் பாரதிதாசன், ஜெயராஜ் குடும்பத்தினருடன் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் பிரேத பரிசோதனை கூடத்தில் உறவினர்கள் முன்னிலையில் தந்தை மகனின் உடலில் இருக்கும் காயங்கள் குறித்து ஆய்வு செய்தனர். எனினும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும் வரை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது எனக் கூறி அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




