போலி இ – பாஸ் மூலம் ராஜஸ்தானில் இருந்து கோவைக்கு வந்த சொகுசு பேருந்து பறிமுதல்!
கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.மாநில,மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இரவு,பகலாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக கோவை – திருப்பூர் மாவட்ட எல்லைப்பகுதியான கருமத்தம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனையிட்ட காவல் துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சொகுசுப்பேருந்தில் வந்த 30 பேரிடமும் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அவர்கள் போலி இ – பாஸ் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கோவைக்கு வந்தது தெரிய வந்தது.அதனையடுத்து போலி இ – பாஸ் மூலம் கோவை வந்த சொகுசுப்பேருந்தை பறிமுதல் செய்தனர்.பேருந்தில் வந்த 30 பேருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும்,பல மாநில எல்லைகளை கடந்து சொகுசுப்பேருந்து எப்படி கோவை வந்தது ? போலி இ – பாஸ் பெற்றது எப்படி ? என்பது காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே போலி இ – பாஸ் பெற்று விருதுநகர் வரை சென்ற ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கோவை சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பெற்றது கண்டறியப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து போலி இ – பாஸ் மூலம் கோவை வந்த சொகுசுப்பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






