கொரோனா கட்டுப்பாடுகள் காற்றோடு போச்சு! டிபார்ட்மெண்ட் ஸ்டோரால் பரவுமோ என்று பேச்சு!!
கடுமையான கட்டுப்பாடுகளுடன் வணிக நிறுவனங்கள், கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதனை சிறிதும் கண்டு கொள்ளாத டிபார்ட்மெண்ட் ஸ்டோரால், திருப்பூர் மீண்டும் சிவப்பு மண்டலமாகுமோ என்று பொதுமக்கள் கவலை கொண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. எனினும், கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும், சுகாதாரத்துறையும் இரவுபகல் பார்க்காமல் போராடி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும், மக்களின் தேவைகள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரம் கருதி, கடும் நிபந்தனைகளுடன் கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க, தமிழக அரசு அனுமதி தந்திருக்கிறது. அரசு விதிகளை பின்பற்றி பல நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.
ஆனால், திருப்பூர் மங்கலம் சாலை எஸ்.ஆர். நகரில் செயல்பட்டு வரும் ஆனந்தா டிபார்ட்மெண்ட் ஸ்டோரில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதோ, முகக்கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகளோ இல்லை என்றும், இதுபோன்ற அலட்சியத்தால் கொரோனா பாதிப்பு உருவாகுமோ என்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதியினர் சிலர் ‘குற்றம் குற்றமே’ நிருபரிடம் கூறியதாவது: ஊரடங்கின் 2 மற்றும் 3வது கட்டங்களின் போதே இந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் செயல்பட்டு வந்தது. அப்போதெல்லாம் ஓரளவு சமூக இடைவெளியை கடைபிடித்து வந்தனர். ஆனால், தற்போது இக்கடையில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள், விதிகளை துளியும் கடைபிடிப்பதில்லை.
கடையில், பெயரளவுக்கு சானிடைசர் வைத்துள்ளனர். ஆனால், அதை கொண்டு கைகளை தூய்மை செய்வது கிடையாது. உள்ளே பணியாற்றும் பெண்கள் முகக்கவசத்தை கழுத்தில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்களே தவிர, முகத்தில் அணிவதில்லை. பருப்பு, சர்க்கரை, புளி போன்றவற்றை பாக்கெட் போடும் பெண்கள் கூட, கையுறை, முகக்கவசத்தை அணிவதில்லை. ஒருசில பெண்கள், தும்மும் போது எதிரில் இருப்பவர்கள் பீதியடைய வேண்டியிருக்கிறது.
இதனால், பொருளின் சுத்தம், தரம், சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிப்பதிலும் கட்டுப்பாடுகள் கிடையாது. உள்ளே முகக்கவசம் அணியாமல் பலரையும் அனுமதிக்கின்றனர். யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தாலும், இதுபோன்ற இடங்களில் வந்து செல்வதன் மூலம், அது மேலும் பலருக்கு பரவ வாய்ப்பாக அமைந்துவிடும்.

மாநகராட்சி அதிகாரிகளும் இதுபோன்ற விதிமீறல்களை கண்டறிய சோதனை செய்து நடவடிக்கை எடுப்பதற்கு பதில், கடைக்காரர்களிடமே மாமூல் வாங்கிக் கொண்டு கண்டும் காணாமல் இருப்பதாக ஒருபேச்சு உள்ளது. ஆனால், திருப்பூர் கலெக்டர், கொரோனா விவகாரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுப்பவர். மீன் மார்க்கெட்டில் விதிமீறல் இருந்ததால், உடனே அதை மூடச் சொன்னார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on Xபசுமை மண்டலமாக உள்ள திருப்பூரை, இதுபோன்ற விதிமீறல் நடவடிக்கைகள் மீண்டும் சிவப்பு மண்டலத்திற்கு மாற்றிவிடும்; மக்களின் பாதுகாப்பும், அரசின் நடவடிக்கைகளும் கேள்விக்குறியாகிவிடும். எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக இவ்விஷயத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, மக்களை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.






