பிரசன்னாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் மின்சார வாரியம்! மின்கட்டணம் செலுத்த தவறியது உண்மை தான் எனக்கூறிய பிரசன்னா!
மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் மின் கட்டணம் செலுத்த தவறியது உண்மை தான் என்று நடிகர் பிரசன்னா கூறுகிறார். இதற்கு முன்பு காலதாமதமின்றி தவறாமல் கட்டணத்தை செலுத்தி வந்திருப்பதாக கூறி இருக்கும் அவர் நான்கு மாத கணக்கிட்டாலும் மார்ச் மாத கட்டணமும் சேர்த்து தொகை கூடுதலாக வந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மின் வாரியத்தை குறை சொல்வதோ, குற்றம்சாட்டுவதோ தன்னுடைய நோக்கம் இல்லை என்று தெரிவித்திருக்கும் அவர் இக்கட்டான இந்த சூழலில் மக்களுக்கு தளர்வோ, தவணை முறையோ, கால அவகாசமோ கிடைத்தால் மிக்க உதவியாக இருக்கும் என்பதை தன்னுடைய வேண்டுகோள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டணம் குறித்து நடிகர் பிரசன்னா தெரிவித்த கருத்துக்கு தமிழக மின்சார வாரியம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் பிரசன்னா வீட்டில் ஜனவரி மாதம் 13 ஆயிரத்து 528 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப் பட்டதாகவும், மார்ச் மாதம் கணக்கீடு செய்யப்படாத காரணத்தால் அதே தொகை நிர்ணயிக்கப்பட்ட தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த தொகையை பிரசன்னா செலுத்தவில்லை என்று தெரிவித்துள்ள மின்வாரியம் நான்கு மாதங்களுக்கு 6,920 யூனிட் மின் நுகர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அதற்கான கட்டணம் 42 ஆயிரத்து 632 ரூபாய் என்றும் கூறுகிறது. 4மாத காலத்தில் மின் நுகர்வு யூனிட் இரண்டாக பிரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ஜனவரி மாதத் தொகையை செலுத்தாத காரணத்தால் பிரசன்னாவுக்கு 42 ஆயிரம் ரூபாய் அதிகமாக தெரிகிறது என்றும் யூனிட்டை கழித்து கணக்கிடவில்லை என்று சொல்வது தவறானது என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. கட்டணம் குறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் www.tangedco.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்றும் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது .






