தமிழகத்தில் 9 தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்கள் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவல் குறைவாக இருக்கும் தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை மாவட்ட நீதி மன்றங்களை ஜூன் 1-ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக இந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களையும் திறக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் உயர்நீதிமன்றத்திற்கு கோரிக்கைகளை அனுப்பியிருந்தனர். அவற்றை பரிசீலித்த உயர்நீதி மன்ற நிர்வாக குழு இந்த ஒன்பது மாவட்டங்களையும் தாலுக்கா நீதிமன்றங்களை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐந்து வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க வேண்டும். வழக்கு தொடுத்தவர்களை அனுமதிக்கக்கூடாது. நீதிமன்றங்களில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .






