அதி தீவிர புயலாக அம்பன் புயல் கரையை கடந்து வருகிறது!
வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் தற்போது மேற்கு வங்க மாநிலம் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவை ஒட்டிய சுந்தரவனக் காடுகளுக்கு இடையே அதி தீவிர புயலாக கரையை கடந்து உள்ளது.
பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க துவங்கிய புயல் மணிக்கு 22 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கன மழையும் பெய்து வருகிறது. புயலின் கண் பகுதி இன்னும் ஒரு மணி நேரத்தில் முழுவதுமாக கரைப்பகுதியை அடைந்து விடும் என கூறப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நான்கு மணி நேரத்தில் புயல் முழுவதுமாக கரையை கடக்கும் என்றும் பின்னர் படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பன் புயல் காரணமாக தமிழகத்தின் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.






