தமிழகத்தில் அவசர பயணம் மேற்கொள்வதற்கான இ-பாஸ் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொது முடக்கம் அமலில் இருப்பதால் திருமணம், மருத்துவம், இறப்புகள், வேறு இடத்தில் சிக்கி தவிர்த்தல் ஆகிய நான்கு அவசர காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு https://tnepass.tnega.org இணையதளத்தில் சரியான காரணம் மற்றும் சான்றிதழ்களோடு விண்ணப்பித்து பயணத்திற்கான இ – பாஸ் பெறவேண்டும். தற்போது வரை எட்டு லட்சம் பேரின் விண்ணப்பங்கள் இது வரை இதன் மூலமாக பரிசீலிக்கப்பட்டு உள்ளன. ஆனால் சில நேரங்களில் தேவையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டும் இ-பாஸ் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட பின்னர் அதே காரணம் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட ஆட்சியரை அணுகியபோது இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
சில நேரங்களில் இரண்டு மூன்று முறை பதிவு செய்து நிராகரிக்கப்பட்டு அதன்பின்பு ஒப்புதல் வழங்கப்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இதுகுறித்து இ-பாஸ் மைய அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு கேட்டபோது மருத்துவம் மற்றும் இறப்பு சார்ந்த இ-பாஸ் விண்ணப்பங்களை 30 நிமிடத்தில் பரிசீலிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். சரியான காரணங்கள் முறையான சான்றுகளோடு இணையத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டால் நிச்சயம் ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.