தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி, காவேரிபட்டினம், வரகூர், போச்சம்பள்ளி, சூளகிரி , வேப்பணம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இந்த கனமழையால் பழைய வீட்டு வசதி வாரியம், ஜக்கப்பன் நகர், சேலம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் சூளகிரி பகுதியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று பற்றி எரிந்தது.
இதேபோல் தஞ்சையில் கரந்தை, பள்ளி அக்ரஹாரம், மேலவஸ்தாசவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன், ஸ்ரீரங்கம் மற்றும் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் மதுரை கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்தது.






