அரசியல் அழுத்தம் இல்லாமல் விசாரிக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஒவ்வொரு விவகாரமும் பெரிய அளவில் எடுத்துச்செல்லப்பட்டு வைரலாக மாற்றப்பட்டு வருகிறது.
இதில் சமீபத்திய முக்கியமான தகவல் இந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் தான். இது குறித்து தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது புகார் அளித்திருந்த நிலையில்,இந்த வழக்கு விசாரணையில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்க கூடாது என்று தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி. ஜே.இ. பத்மஜா அவர்களுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகளை அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, கடந்த நவம்பர் 11, 2026 அன்று ‘தி நியூஸ் மினிட்’ (The News Minute) ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் (NCW) தாமாக முன்வந்து (suo motu) விசாரணைக்கு எடுத்துள்ளது.
முன்னதாக நடந்த தவறான நடத்தைகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மதுபோதையில் மாவட்ட ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி. விஜயா ரஹத்கர், இக்குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் உயர் அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் புகார் மனுக்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யுமாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆணையம், சம்பந்தப்பட்ட நபர் வகிக்கும் பதவியைப் பொருட்படுத்தாமல், எவ்வித அரசியல் அல்லது வெளிப்புறத் தலையீடும் இன்றி இவ்விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை (Action Taken Report – ATR) 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பெண் அரசு அதிகாரிகளின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நலன் எவ்வித விதிவிலக்குமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். துன்புறுத்தல் அல்லது தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்பதிலிருந்து எந்தவொரு பதவியோ அல்லது செல்வாக்கோ யாரையும் மேலானவர்களாக ஆக்கிவிட முடியாது என்று பதிவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





