அரசு பேருந்து நடத்துனரின் காதை கடித்து துப்பிய இளைஞர்..!
சென்னை கொடுங்கையூரில் அரசுப் பேருந்து நடத்துநர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இளைஞர் ஒருவர் அவரது காதைக் கடித்துத் துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொடுங்கையூரில் கடந்த 13-ம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில், மத்திய மின்சார பணிமனையைச் சேர்ந்த தடம் எண் 2C பேருந்து கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தைப் பின்னோக்கி எடுப்பதற்காக நடத்துநர் நித்தியநாதன் வழிகாட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், முன்விரோதம் காரணமாக நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் நடத்துநரின் காதைக் கடித்துத் துப்பியுள்ளார்.இதையடுத்து, அந்த இளைஞரின் நண்பர்களும் அங்கு வந்து நடத்துனரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், நடத்துநரின் முதுகில் கத்தியால் கீறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நடத்துநர் நித்தியநாதன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது நலமுடன் உள்ளார். இந்தச் சம்பவம் குறித்துப் பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 2 பேரைக் காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





