வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை — வனத்துறை எச்சரிக்கை !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை,சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை,சிறுத்தை,மான்,காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.அவை அவ்வப்போது தண்ணீருக்காகவும்,உணவு தேடியும் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன.
தமிழகத்தில் தற்போது சுட்டெரித்து வரும் அக்னி வெயிலால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர்,உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதனை தடுக்க வனத்துறையில் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.வனவிலங்குகளின் தாகத்தை தணிக்கும் வகையில் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்த்தொட்டிகளை சுத்தம் செய்து தினந்தோறும் நீரினை நிரப்பி வருகின்றனர்.அதனையும் மீறி வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் விளைநிலங்களில் புகுந்து விடுகின்றன.ஊருக்குள் புகும் வனவிலங்குகளை சிலர் வேட்டையாடி வருகின்றனர்.ஊருக்குள் புகுந்து விடும் வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் வனவிலங் குகளை வேட்டையாடுவது அங்கொன்றும்,இங்கொன்றுமாக நடந்தேறி வருவது வனவிலங்கு ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சுரேஷ் கூறுகையில் ஊரடங்கு காலத்தில் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் நுழையும் வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்கும் பொருட்டு பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஆனைகட்டி,பாலமலை,கோபனாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,தொடர் கண்காணிப்பில் ஊரடங்கு காலத்தில் மட்டும் 13 பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் நுழையும் வனவிலங்குகளை துன்புறுத்தவோ, வேட்டையாடுவதோ கூடாது.இதனையும் மீறி வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும்,மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவுப்படி காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கும் வகையில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருவதாகவும்,வனப்பகுதி முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும்,வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் செல்லும் பொதுமக்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டாம் எனவும் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளார்.






