--- --:--:-- --

போலி வைத்தியர் திருத்தணிகாச்சலத்திற்கு 6 நாட்கள் போலீஸ் காவல்..!

5

கொரொனா தொற்றை 24 மணி நேரத்தில் குணமாக்கி விடுவதாகவும் அதற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் கதையளந்த கோயம்பேடு ரத்னா கிளினிக் போலி சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலம் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். திருத்தணிகாச்சலம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் மீது நாளுக்கு நாள் விதவிதமான புகார்கள் குவிந்து வருகின்றன.

 

ஆட்டிசம் என்பது நோய் அல்ல என்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவு என்றும் கூறி ஏராளமான ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் மாதம் 7000 ரூபாய் வீதம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக பாரதி என்பவர் புகார் தெரிவித்திருந்தார். சிறைக்கு செல்லும் முன்பாக தான் போலி மருத்துவர் அல்ல என்பதை நிரூபிப்பதாக நினைத்து ஆதரவாளர்கள் மூலம் திருத்தணிகாச்சலம் சான்றிதழ் ஒன்றை வெளியிட்டார்.

 

அதுதான் திருத்தணிகாச்சலத்தை போலி மருத்துவர் என காட்டிக் கொடுத்துள்ளது. கடலூர் மாவட்டம் குள்ளன் ஜாடியை பூர்வீகமாக கொண்ட பரம்பரை பச்சிலை வைத்தியம் என்று 2016 ஆம் ஆண்டு குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியரிடம் சான்றிதழ் ஒன்றை பெற்றுள்ளார் தணிகாச்சலம்.

 

ஆனால் சித்த மருத்துவம், அலோபதி மருத்துவம் படித்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில் வட்டாட்சியர் கொடுத்த இந்த சான்றிதழை வைத்துக்கொண்டு தான் மத்திய, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளை மட்டுமின்றி மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். குறிப்பாக ஆண்மை குறைவுக்கு மருந்து எனக் கூறி ஏராளமானவர்களை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

 

எய்ட்ஸ், புற்று நோய்க்கு மருந்து, ஆட்டிஸம் , போன்றவற்றுக்கும் தன்னிடம் மருந்து இருப்பதாக தந்துவிட்டு தற்போது போலீசில் சிக்கியுள்ளார் திருத்தணிகாச்சலம். பல்வேறு மோசடி புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தும் போது மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் போலி மருத்துவர் திருத்தணிகாச்சலத்தை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஒரே நாளில் கொரொனாவை குணமாக்குவேன் எனக்கூறிவிட்டு தன்னிடம் வருபவர்களிடம் 100 மாத்திரை வழங்கியது ஏன் உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை இல்லாத நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி தணிகாச்சலம் பணம் பறித்தார் என்பதற்கான திடுக்கிடும் தகவல் வெளியாகலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon