முதல்வர்களுடன் 5 வது முறையாக பிரதமர் நடத்திய ஆலோசனை…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பிரதமர் மோடி ஐந்தாவது முறையாக அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின் போது கொரொனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவது மக்களின் இயல்பு வாழ்க்கையை படிப்படியாக அதிகரிப்பது என இரண்டு சவால் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

 

கொரொனா வைரஸ் கிராமப்புறங்களில் பரவாமல் தடுப்பது தற்போதைய தேவை என குறிப்பிட்ட பிரதமர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில முதலமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார்.

 

உலகப் போருக்கு முன், உலகப் போருக்குப் பின் என்பதைப்போல கொரொனாவுக்கு முந்தைய காலம், கொரொனாவுக்கு பிந்தைய காலம் என உலகம் மாறி விட்டதை உணர்ந்து புதிய உலகத்திற்கு ஏற்றார் போல நடந்து கொள்ள வேண்டுமென பிரதமர் அறிவுறுத்தினார்.

 

கொரொனா வைரசுக்கு புதிய தீர்வோ தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்காத வரையில் சமூக விதிகளை கடைபிடிப்பது அவசியம் எனக் கூறிய பிரதமர் மோடி பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக குறிப்பிட்ட வழித்தடங்களில் ரயில் இயக்கப்படும் என்று கூறினார் பிரதமர் மோடி. அதே போல மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் சிறப்பு கோரிக்கைகளை முன்வைத்தார்.

 

அதில் புலம்பெயர்ந்த மாநில மக்களை மீட்பது வலியுறுத்தப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பும் மக்களை கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் பல மாநிலங்களில் தவிக்கும் மக்களை சொந்த மாநிலங்களுக்கு திரும்ப உதவிட வேண்டும் எனவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்தனர்.

 

இந்த ஆலோசனையின் போது முதலமைச்சர்கள் பிரதமரை பாராட்டியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply