தாய்க்கு கொரொனா…! தந்தை உயிரிழப்பு…! சிறுவனின் பரிதாப நிலை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


விழுப்புரத்தில் 11 வயது சிறுவனின் தாய் கொரொனாவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் சிறுவன் தவித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள நல்லா பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார்.

 

பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அய்யனாரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கடந்த 7ஆம் தேதி மருத்துவர்கள் அவரை அனுப்பி வைத்தனர். வீடு திரும்பிய அவர் உயிருக்கு போராடும் நிலைக்கு ஆளானார்.

 

அவரின் மனைவி மற்றும் தாய் இருவரும் அவரை கவனித்து வந்த சூழலில் வெள்ளிக் கிழமை மாலை இருவருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் அவரை அழைத்து சென்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். அய்யனாரின் அருகே அவரது 16 வயது மகன் ஜீவா மட்டுமே இருக்க உதவிக்கு யாரும் இல்லாததால் சில நிமிடங்களிலேயே ஐயனாரின் உயிர் பிரிந்தது.

 

தன் கண்முன்னே தந்தை உயிர் பிரிந்ததை கண்டு செய்வதறியாமல் திகைத்த சிறுவன் உடலை அடக்கம் செய்ய வேண்டி உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் உதவி செய்ய ஒருவர்கூட முன் வராததால் தந்தையின் உடல் அருகிலேயே சோகத்துடனும் இருந்துள்ளான் சிறுவன் ஜீவா.
இந்நிலையில் இந்த துயர சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டாச்சிபுரம் தாசில்தார் பார்த்திபன், ஐயனாரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார்.

 

முழு உடல் பாதுகாப்பு கவசங்களை அணிந்து வந்த சுகாதாரத் துறை அலுவலர்கள் அவரது உடலை சுமந்து சென்று அடக்கம் செய்தனர். தந்தையின் மரணம் ஒருபுறம், தாய்க்கு கொரொனா நோய்த்தொற்று மறுபுறம் என தனி மரமாய் தவிக்கும் சிறுவன் ஜீவாவின் கண்களில் படர்ந்துள்ள சோகம் காண்பவர்களை கலங்க செய்துள்ளது.


Leave a Reply