” ஒரு மணிக்கு மேலே சுற்ற மாட்டோம் ” என கும்மியடித்து உறுதி மொழி அளித்த இளைஞர்கள்!!! சூலூர் காவல் துறையினரின் நூதன தண்டனை !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்திலும், சென்னையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. கடந்த சில நாட்களாகவே நோய்த்தொற்று 50,60 என இருந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1082 ஆக உயர்ந்துள்ளது.இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று செல்ல காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மளிகை,காய்கறி கடைகள் திறக்கவும் அரசு அனுமதி அளித்தது.

இந்த நிலையில் இளைஞர்கள் சிலர் அத்தியாவசிய பொருட்களை பெற செல்வதாக கூறி மதியம் 1 மணிக்கு பின்பும் ஊரடங்கினை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்து வருகின்றனர்.காவல் துறையினர் அவர்களை பலமுறை அபராதம் விதித்தும்,வாகனங்களை பறிமுதல் செய்தும் எச்சரித்து வருகின்றனர்.

 

இருந்தும் இளைஞர்களில் சிலர் இதுகுறித்து கேட்பதில்லை.இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ஊரடங்கினை மீறி சாலைகளில் உலா வருவதை கண்ட காவல் துறையினர் இளைஞர்களுக்கு நூதனமான முறையில் தண்டனை அளித்துள்ளது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஊரடங்கினை மீறி மதியம் 1 மணிக்கு பின்பும் சாலைகளில் சுற்றித்திரிந்த இளைஞர்களை பிடித்த சூலூர் காவல் துறையினர் அவர்களை வட்டமாக நிற்க வைத்து ” ஒரு மணிக்கு மேலே சாலைகளில் சுற்ற மாட்டோம் . தனித்திருப்போம்.விழித்திருப்போம் ” என்பது போன்ற வாசகங்களை கும்மிப்பாட்டு போல பாட வைத்து ” கும்மி அடிக்க ” வைத்து நூதன முறையில் தண்டனை வழங்கிய சம்பவம் பொதுமக்களிடையேயும், சாலைகளில் சுற்றித்திரியும் இளைஞர்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

ஊரடங்கினை மீறி சாலைகளில் உலா வந்த இளைஞர்களுக்கு சூலூர் காவல் துறையினர் வழங்கியுள்ள நூதன தண்டனை பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Leave a Reply