கொரோனா பிரச்னைக்கு இடையில் இது வேற…! மீனவர்களுக்கும் வார்னிங்..!
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடும் வெயில் எதிரொலியாக 106 டிகிரி வரை வெப்பம் பதிவாகி உள்ளது. ஆகையால் சில இடங்களில் வெப்பச் சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இந்நிலையில் தென் தமிழகம், மலைப் பகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்கள் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 12 சென்டி மீட்டர் மழையும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 9 சென்டிமீட்டர் மழையும், தஞ்சை மாவட்டம் மதுக்கூர் மற்றும் நன்னிலத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்றின் வேகமானது 40கி.மீ முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும். கடல் சீற்றத்துடனும் அவ்வப்போது மிக சீற்றத்துடன் காணப்படும். எனவே, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.






