--- --:--:-- --

சென்னை – மதுரை விமான சேவையை நிறுத்துகிறது ஏர் இந்தியா

10

சென்னை மற்றும் மதுரை இடையே சுமார் 68 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவை, வரும் அக்டோபர் 25-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகிய பெயர்களில் தங்கு தடையின்றி இயங்கி வந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழித்தடத்தை, தற்போது அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முழுமையாக மூடத் திட்டமிட்டுள்ளது.

 

 

இந்தச் சேவையின் நிறுத்தத்திற்குப் போதிய பயணிகள் இல்லாததும், பொருளாதார ரீதியாக இது லாபகரமானதாக இல்லாததுமே முக்கியக் காரணங்களாக ஏர் இந்தியா நிர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சுற்றுலா முகவர்களும் பயண ஏற்பாட்டாளர்களும் இக்கருத்தை முற்றிலும் மறுக்கின்றனர். தினசரி இந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வரும் நிலையில், இந்த முடிவு நியாயமற்றது என்பது அவர்களின் ஆதங்கமாக உள்ளது.

 

 

மேலும், திருச்சி போன்ற நகரங்களிலிருந்து ஹைதராபாத், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்குப் புதிய சேவைகளைத் தொடங்கும் ஏர் இந்தியா நிர்வாகம், மதுரை – பெங்களூரு வழித்தடத்தை இயக்கும்போது, சென்னை – மதுரை வழியை மட்டும் கைவிடுவது ஏன் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

 

 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விலகுவதன் மூலம், சென்னை – மதுரை வழித்தடத்தில் தினமும் ஐந்துக்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் ‘இண்டிகோ’ நிறுவனம் மட்டுமே ஒரே விமானச் சேவையாக எஞ்சியிருக்கும். இதன் மூலம் இந்த வழித்தடத்தில் இண்டிகோவின் தனி ஆதிக்கம் (Monopoly) உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது போட்டித் தன்மையைக் குறைத்து, சாதாரண மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைத்து வந்த விமானக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

 

 

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் தெற்கு தமிழகத்திற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் காலமாகும். நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்கள் வரவிருக்கும் வேளையில், இந்த விமானச் சேவை நிறுத்தப்படுவது தென் மாவட்டச் சுற்றுலாத் துறையைப் பெருமளவில் பாதிக்கும். ஏற்கெனவே பயணத் திட்டமிட்டுள்ள வெளிநாட்டுப் பயணிகள் அதிகக் கட்டணம் மற்றும் பயணச் சிரமங்கள் காரணமாக மதுரை வருகையைத் தவிர்க்கவும் வாய்ப்புள்ளது.

 

 

எனவே, தென் மாவட்ட எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரை நேரில் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என்றும், ஏர் இந்தியா நிறுவனம் தனது இந்த முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மதுரை, சிவகாசி மற்றும் காரைக்குடிப் பகுதிகளைச் சேர்ந்த வர்த்தகர்களும், சுற்றுலா அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon