--- --:--:-- --

கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் திடீர் ரெய்டு ஏன்?

01

சென்னை, திருச்சி, கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள கே.என். நேருவின் இல்லத்தில் இன்று காலை முதல் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் டிவிஎச் குழுமத் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

 

இதேபோல் திருச்சி தில்லை நகரில் உள்ள நேருவின் இல்லத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது அவர் லால்குடியில் இருந்த நிலையில், அவர் வரும் வரை அதிகாரிகள் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் கே.என். நேரு வந்த பிறகு சோதனை தொடங்கியது. இதுகுறித்து அறிந்த அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர். மேலும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் அங்கு வந்தார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

 

இதேபோல் கோவையில் உள்ள டிவிஎச் நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. அங்கு அந்த நிறுவனத்தை நேருவின் மற்றொரு சகோதரரான மணிவண்ணன் நடத்தி வருகிறார். மேலும், கோவை ராமநாதபுரம் சிவராம் நகர் பகுதியில் வசிக்கும் ஓய்வுப் பெற்ற கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் சசிப்பிரியாவின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது. கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது.

 

 

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஆயிரத்து 20 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை புகார் அளித்திருந்தது. கட்டடம் கட்டுதல், கழிப்பறைகள் அமைத்தல், அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமனம், குடிநீர் திட்டப் பணிகளுக்கான டெண்டர்கள் உள்ளிட்டவற்றில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு டெண்டருக்கும் 7.5 முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், ஒப்பந்ததாரர்களிடம் 20 முதல் 25 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்கைப் பதிவு செய்து, கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் தற்போது சோதனை நடத்தி வருகிறது.

 

 

இதற்கிடையே, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரரான வேலுமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவிநாசியை சேர்ந்த வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.என்.நேருவுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், கைகாட்டிப்புதூரில் உள்ள வி.ஆர். வாட்டர் இன்ஃப்ரா நிறுவன அலுவலகம் மற்றும் காமராஜ் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சோதனை நடக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon