கொரோனா வேகமாக பரவியது எப்படி…? சென்னை காவல் ஆணையர் நேரில் ஆய்வு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக மொத்தம் 38 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனையடுத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற படுகின்றன என்பதை காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். ஆசியாவின் மிகப் பெரிய சந்தையான கோயம்பேட்டில் நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

 

இந்த நிலையில் சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு அடுத்தடுத்து கொரொனா உறுதி செய்யப்பட்டு இருப்பது சென்னை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. முதன்முறையாக கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு கொரொனா உறுதியாக, பழ வியாபாரி ஒருவர் வியாபாரிகளான தந்தை, மகன் என பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நீண்டது.

 

பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் தொற்று பரவியது. கடந்த நான்கு நாட்களில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 38 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு சந்தைக்கு சென்ற சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் விதிமுறைகளை வியாபாரிகளும் தொழிலாளர்களும் கடைபிடிக்கிறார்களா என ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்ட காவல் ஆணையர் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் தற்காலிக பழங்கள் மற்றும் மலர் சந்தை இன்று அதிகாலை முதல் இயங்க தொடங்கியுள்ளது. கொரொனா நோய் தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கிவந்த பழம் மற்றும் பூ அங்காடிகள் சென்னை மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் செயல்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிவித்திருந்தது.

 

அதன்படி இருநூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அங்கு அமைக்கப்பட்டன. ஆனால் மொத்த வியாபாரிகள் குறைந்த அளவிலேயே இருந்ததால் சில்லரை வியாபாரிகளும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் . மேலும் பல மணி நேரம் காத்திருந்து அதிக விலைக்கு பொருட்கள் வாங்கி செல்லும் நிலை உள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர்.

 

குறிப்பாக பொருட்கள் வாங்க வந்த மக்கள் மற்றும் வியாபாரிகளில் பலர் தனிமனித இடைவெளியின்றி பொருட்கள் வாங்க சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply