கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கொரொனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் களப்பணியாற்ற சிறப்பு குழுக்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மிக நெருக்கமான வசிப்பிடங்களில் வாழும் ஏழை மக்கள் அவர்கள் இருப்பிடங்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லை எனில் அரசால் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தங்க ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

நோய் கட்டுப்பாடு பகுதி மக்களுக்கு முக கவசம் வழங்கப்படுவதுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் 250 கிராம் கிருமிநாசினி பவுடர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். நோய் தடுப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

 

சென்னையில் நோய் பாதிப்பு அதிகமுள்ள ராயபுரம், திருவிக நகர், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் தனித்தனி களப்பணி குழுவும் மற்ற 9 மண்டலங்களில் 3 மண்டலத்திற்கு ஒரு களப்பணி குழுவை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற 6 சிறப்பு குழுக்கள் திருப்பூர், கோவை, மதுரை ,சேலம் ஆகிய மாநகராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ளன.

 

குழுவில் ஐ‌ஏ‌ஏ‌எஸ் அதிகாரி தலைமையில் காவல்துறை அதிகாரி மாவட்ட வருவாய் அலுவலர் மாநகராட்சி அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து அதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பு குறைவாக உள்ள பச்சை மண்டலங்களில் படிப்படியாக தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளியில் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் கொரொனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஆட்சியர்களின் சிறப்பான செயல்பாடுகளால் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரொனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக முதல்வர் பாராட்டினார்.

 

மிகக்குறைவான பரப்பளவில் அதிகளவு மக்கள் வசிப்பதால் சென்னையில் வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதாகவும் அவர்ஆதங்கப்பட்டார். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தவும், அதில் 55 வயதை கடந்தவர்களுக்கு பதிலாக தகுதியான குடும்ப உறுப்பினர் வேறொருவருக்கு பணி வழங்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.


Leave a Reply